Saturday, August 20, 2011

புதிய தலைமை செயலக கட்டிடம் ஆஸ்பத்திரியாக மாறுகிறது

முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை சீர் செய்வது நல்ல காரியம் தான், ஆனால் அதுவே முதல் வேலை என்று இருபது தான் கொடுமை.
இவர்களை பாராட்டுவதா ? இல்லையா என்று புரியவில்லை ??? எப்படி ஆயினும் தலைமை செயலகத்தை புதிய கட்டத்தில் நடத்துவதே நன்றாக இருக்கும் .
இதை யார் போய் அந்த அம்மாவிடம் சொல்லுவது??

ம்ம்ம் .... M .L .A கலை போலீஸ் புடிக்கவந்தால் .....ஹாஸ்பிடல் உள்ளே சென்று படுத்து கொள்ள வசதியாக இருக்குமுன்னு .....நினைச்சாரோ என்னம்மோ???



சென்னை : திமுக அரசால் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடம், அரசு மருத்துவமனையாக மாற்றப்படும். அதையொட்டி கட்டப்படும் ‘பி’ பிளாக்கில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 110வது விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கு தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாக பெறும் வகையில், “பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை’’ (Multi Super Specialty Hospital)ஒன்றை அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய திமுக அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் ‘ஏ’ கட்டிடத்தில் அமைக்கப்படும்.

இந்த கட்டிடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல. பயன்படுத்தக்கூடிய இடம் வெகுகுறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை. மேலும் இரு வேறு கட்டிடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும் சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது.

தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ‘பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை’ அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்படும். இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இந்த மருத்துவமனை, டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் பிளாக் ‘பி’ கட்டிடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கவும் அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஊழலை ஒழிக்கும் போராட்டம் தொடருமென கொட்டு முரசே!

உணவு, உடை, இருப்பிடம்... ஏழைகளின் வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மூன்று விஷயங்கள் இவை. உறங்கும் போதும், எழும் போதும் மனதோடு நிழலாடும் ஏக்கமான கனவுகள் இவை. அடுத்த வேளை சோற்றுக்கு அவதிப்படுபவன் கூட, அடுத்தவன் பணத்தை தொட பயப்படுவான். நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி... நாட்டையே வஞ்சனை செய்யும் இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு, தன்செயல் அவமானமாக தெரியாதா? நியாயமே வாழ்க்கையாய், நேர்மையே நெறிமுறையாய் வாழ்பவர்களின் நெஞ்சங்களை தினம் தினம் பொசுக்கி கொல்வது ஊழல் தான். ஊழலை ஒழிக்க புதிய யுத்தம் துவங்கி விட்டது. காந்தியவாதி அன்னா ஹசாரே துவங்கியிருப்பது, மகாத்மாகாந்தி வழியில் இன்னொரு அகிம்சை போராட்டம் தான். ஊழலை ஒழிக்க இன்னொரு 200 ஆண்டுகள் வேண்டாம். ஒவ்வொரு இந்தியனும் ஓங்கி குரல் கொடுத்தால், அரசியல்வாதிகளின் மனசாட்சிக்கு வலியெடுக்கும். சுதந்திர இந்தியா நேர்மையான காற்றை சுவாசிக்கும்.

இதோ... ஊழலுக்கு எதிரான கல்லூரி மாணவர்களின் ஆதரவுக் குரல்...

சி. அர்ச்சனா (செந்தமிழ்க் கல்லூரி, மதுரை): அடித்தட்டு மக்கள் முன்னேறவிடாமல் தடுப்பது ஊழல் தான். வசதி படைத்தவர்கள் பதவி, விளையாட்டு, வேலை என அனைத்திலும் பணம் கொடுத்து சாதிக்கின்றனர். ஏழைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஊழலில் சிக்கியவர்கள் அனைவருமே, ஒருகாலத்தில் வசதியில்லாதவர்கள் தான். இவர்களுக்கு பணம் எப்படி சேர்ந்தது? இவர்களுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் சரிதான்.

பி.தர்மலிங்கம் (பொறியாளர், திண்டுக்கல்): ஊழல்வாதிகள் பாகுபடின்றி தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தான் இக்கருத்தில் வேறுபடுகின்றனர். லோக்பாக் வரம்பில் பிரதமரையும், அவசியம் கொண்டு வரவேண்டும். தவறு செய்பவர்கள் உயர்பதவியில் இருந்தால் விதிவிலக்கு என்பது, சுயலாபத்திற்காக கொண்டு வரப்படும் மசோதா ஆகிவிடும். இதில் எந்தவித பலனும் இருக்காது.

பி.நந்தினி(வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, தேனி): ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேயை சிறையில் அடைத்தது கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் ஊழலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அதற்காக இணையதளம் மூலம் நான் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். காந்திய போராட்டத்தை ஆதரிப்பது அவசியம்.

எஸ்.ரோஸ்லின் நிர்மலா (செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, ராமநாதபுரம்): ஊழல் மலிந்த இந்தியா, முன்னேற வேண்டுமெனில் லோக்பால் மசோதா கண்டிப்பாக நிறைவேற வேண்டும். கடவுள், சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து, பதவிக்கு வந்த பின் பிரதமர் மட்டுமில்லை... யாரும் விதிவிலக்கு கோரக்கூடாது. மடியில் கனமில்லை எனில் வழியில் ஏன் பயம்? இந்த புரட்சி விடிவின் ஆரம்பம்.

எக்ஸ்.பிரபா(அரசு மகளிர் கல்லூரி, சிவகங்கை) : அரசியலில் சேவை மறைந்து குடும்ப அரசியலாகி போனதால், லஞ்சம், ஊழல் புரையோடிவிட்டது. இதற்காகவே இந்த சட்டம் அவசியம். தனி ஒரு மனிதனுக்கு சமுதாய நலனில் அக்கறை உள்ளது. ஆனால், இந்த நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களுக்கு, இந்த உணர்வு வர தயங்குவது ஏன்?

வி.கார்த்திகை செல்வி (செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்): இந்தியாவில் ஊழலை ஒழிப்பதற்கு இது நல்ல வாய்ப்பு. ஊழல் ஒழிக்கப்பட்டால் வலிமையான பாரதம் உருவாகும். பிரதமரும் இந்திய குடிமகன் தானே? சுயநலத்திற்காக ஊழல் செய்பவர்களுக்கு எதிராக, பொது நலத்துடன் போராடும் ஹசாரேயின் வழியை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவ சமுதாயமும் போராட முன்வர வேண்டும்.

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, சென்னையின் பல இடங்களில் நேற்று, போராட்டம் நடத்தப்பட்டது. திருவான்மியூரில் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது. சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, கடந்த நான்கு நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

திருவான்மியூர்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக, சென்னை திருவான்மியூரில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. மகாத்மா காந்தியின் செயலர் கல்யாணம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்த பாரதி ஆகியோர் துவக்கி வைத்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது நலச் சங்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்ததால், பலர் உடல் சோர்வு ஏற்பட்டு, மயக்க நிலையில் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
மருத்துவர்கள் குழு வரவழைக்கப்பட்டு தொடர்ந்து சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உண்ணாவிரதத்திற்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருவதால், போராட்டம் வலுவடைந்து வருகிறது. இன்றும் தொடர்கிறது.

திருவொற்றியூர்: வாய்ஸ் ஆப் இந்தியன், வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கம் மற்றும் வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பு இணைந்து, திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிறுத்தத்திலிருந்து சூரியமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், தேசியக்கொடி ஏந்தி, பெரியார் நகர், திருவொற்றியூர் மார்க்கெட் வழியாக தேரடி சென்றனர். அவர்களுடன் பொதுமக்களும் ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

சைதாப்பேட்டை: அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதவாக, சைதாப்பேட்டையில் உள்ள பனகல்மாளிகை முன்பாக எக்ஸ்னோரா, ஆனந்தம், சோழநாடு ஆகிய அமைப்புகளின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில், எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், சோழநாடு அமைப்பின் தலைவர் வைரசேகர், ஆனந்தம் அமைப்பின் தலைவர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே, அன்னா ஹசாரேவின் போராட்டம் பற்றி விழிப்புணர்வு செய்தனர். பின்னர், ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பயணிகள், கடைக்காரர்கள், பாதசாரிகள் அனைவரிடமும் சென்று, ஊழலுக்கு எதிராக கையெழுத்து வாங்கினர். நூற்றுக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டு, அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள ஊழல் எதிர்ப்பு கூட்டமைப்பு, பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த, கிராமங்களில் இருந்து பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்த இருப்பதாக, இவ்வமைப்பின் பொதுச்செயலர் ரத்தினபாண்டியன் தெரிவித்தார். இதேபோன்று நகரின் பல இடங்களிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=297612

நான் இல்லை என்றாலும் விடாதீங்க : இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு

புதுடில்லி: திகார் சிறையைவிட்டு வெளியில் வந்த அன்னா ஹசாரேவுக்கு, கொட்டும் மழையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு அளித்தனர். ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி, ராம்லீலா மைதானத்தில் அவர் துவக்கியுள்ள உண்ணாவிரதத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். ""நான் உயிரோடு இல்லாமல் போனாலும் கூட, போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும்,'' என, அன்னா பேசியதைக் கேட்டு கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்னா ஹசாரே நேற்று காலை 11.30 மணியளவில் வெளியில் வந்தார். போலீசார் புடைசூழ அவரை வெளியில் அழைத்து வந்தாலும், ஏற்கனவே போடப்பட்டிருந்த நிபந்தனைகளின்படி, ஹசாரேயை போலீசார் வழிநடத்தி கூட்டிச் சென்றனர். சிறையை விட்டு ஹசாரே வெளியில் வந்தவுடன், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துடன் கோஷங்களை எழுப்பினர். டில்லியில் நேற்று காலை 6 மணி முதலே, மழை பெய்தபடி இருந்தது. இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் சாலைகள் முழுவதுமாக மக்கள், அலைகடலென திரண்டு நின்றிருந்தனர். ஹசாரேவுக்கு வரவேற்பு கொடுப்பதை, தங்களது முக்கிய கடமையாக கருதினர்.

இளைஞர்களுக்கு அழைப்பு: சிறையைவிட்டு வெளியில் வந்தவுடன், அங்கு இரண்டு நிமிடங்கள் மக்கள் வெள்ளத்தின் முன்பாக ஹசாரே பேசினார். அப்போது அவர், ""வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1942ல் அவர்களை எதிர்த்து மகாத்மா காந்தி குரல் எழுப்பினார். அதனால், 1947ல் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இப்போது நாம் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் வேறு. இவர்கள் நாட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். மக்கள்தான் இந்த போராட்டத்தின் சக்தி. மக்கள் சக்தியை, அரசாங்கம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ""ஆட்சியாளர்களை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி போராட்டம் துவங்கி விட்டது. இந்த போராட்டத்தை நான் துவக்கியிருந்தாலும், நான் கூற விரும்பும் செய்தி இதுதான். அதாவது, இந்த போராட்டத்தின் முடிவில் நான் உயிரோடு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒருவேளை நான் இல்லாமல் போனாலும்கூட, ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும்,'' என்றார். இதைக் கேட்டவுடன் கூடியிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின், போலீசார் புடைசூழ பொதுமக்கள் வெள்ளத்தில், டிரக் ஒன்றில் நின்றபடி, அன்னா ஹசாரே ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். திகார் சிறையின் வாசலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள மாயாபுரி சவுக் வரை, அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த தூரத்தை கடப்பதற்கு 2 மணி நேரமானது. மாயாபுரி சவுக் அருகே உள்ள பாலத்தில் இருந்து மக்கள், அன்னா ஹசாரே மீது மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். பின், ஏற்கனவே திட்டமிட்டபடி, அங்கிருந்து போலீசார் அளித்த காரில் ஏறி, ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். அதற்கு முன்பாக, ராஜ்காட் சென்று காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ராம்லீலா மைதானத்திற்குள் நுழைந்தவுடன் அன்னா ஹசாரே பேசும்போது, "" ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும்வரை நான் இந்த ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற மாட்டேன்,'' என்றார். ஆனால், 15 நாட்கள் வரை மட்டுமே உண்ணாவிரதம் இருப்பதற்கு, ஹசாரேவுக்கு டில்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி சமாதியில் மழைக்காக ஓடிய ஹசாரே : காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த ஹசாரே, தான் அணிந்து இருந்த காந்தி குல்லா மற்றும் சால்வையை அகற்றிவிட்டு, ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தினார். பின், ராஜ்காட் வாசலை நோக்கி அவர் செல்ல முயன்ற போது, மழை சற்றே வலுத்தது. உடனே சற்று தூரம் ஓடினார். சிறையில் மூன்று நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தாலும், அவர் எவ்வித சோர்வும் அடையாமல் இருக்கிறார் என்பதை பார்த்து ஆதரவாளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

* திகார் சிறையிலிருந்து ராம்லீலா மைதானத்திற்கு அன்னா ஹசாரே, டிரக் வண்டியில் ஊர்வலமாக வந்தார்.
*"ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும்வரை, உண்ணாவிரதம் தொடரும்' என, அறிவித்தார்
* கொட்டிய மழையிலும், சாலையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று, ஹசாரேக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
*ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க, டில்லியில் குவிந்துள்ள ஆதரவாளர்கள், ராஜ்காட், இந்தியா கேட், ராம்லீலா மைதானம் ஆகிய இடங்களில் பெருமளவில் காணப்பட்டனர்.
* "வலுவான லோக்பால் மசோதா விரைவாக நிறைவேற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால், உண்ணாவிரத போராட்டத்தின் காலம் மாற்றி அமைக்கப்படும்' என, ஹசாரே குழுவினர் தெரிவித்தனர்.
* நீண்ட உண்ணாவிரத போராட்டம் நடத்த ஹசாரே திட்டமிட்டிருந்தார். இருப்பினும் அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த கெஜ்ரிவால் கூறினார்.
* கடந்த மூன்று நாட்களாக திகார் சிறையில் உணவும் ஏதும் உட்கொள்ளாமல் ஹசாரே இருந்ததால், அவரது எடை 3 கிலோ குறைந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
* உண்ணாவிரத போராட்டத்திற்கு முதலில், டில்லி போலீசார் 21 நாட்கள் அனுமதிக்க முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் 15 நாட்கள் என, முடிவானது.
* ராம்லீலா மைதானத்திற்கு செல்லும் வழியில், "இந்தியா கேட்' வழியாக ஹசாரே வருவார் என, அறிவிக்கப்பட்டு இருந்ததால் ஆயிரக்கணக்கானோர் அங்கு குழுமியிருந்தனர். ஆனால், மழையின் காரணமாக, இந்தியா கேட் பகுதிக்கு வராமல் ஹசாரே, காரில் நேரடியாக ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். இதனால், அவரை பார்ப்பதற்காக குழுமியிருந்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Wednesday, August 17, 2011

ரஜினி சொன்னதை அன்றே கேட்டிருந்தால் காங். ஆட்சியைப் பிடித்திருக்கும்-குமரி அனந்தன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதைக் கேட்டிருந்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 1996-லேயே ஆட்சியைப் பிடித்திருக்கும். இன்றைக்கு வந்திருக்கும் அவப்பெயர் நீங்கியிருக்கும், என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான குமரி அனந்தன்.

வண்ணாரப்பேட்டையில் சுதந்திர தினவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் பாப்பாரப்பட்டியில் சிவாவிற்கு மணி மண்டபம் அமைய உழைத்த குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா போன்றவை நடந்தன.

விழாவில் குமரி அனந்தன் பேசுகையில், "நான் சாதித்தவை சில, சாதிக்க எண்ணியவையோ பல! விதைத்தது பல; முளைத்தது சில. கண்ட கனவுகள் பலப்பல; நனவுகளானவைச் சில. நீங்கள் தந்த பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும்போது நிறைவேறாத ஆசைகளையும் எண்ணிப் பார்க்கிறேன்.

கதர் சிட்டங்களை தலையில் சுமந்து, தந்தையாரின் கதர் தொழிலுக்கு காந்திய வழியில் தொண்டு செய்த நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவனாக இருந்தபோது நினைத்தது நடக்கவில்லையே!

1996-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணியை ஆதரிக்க முன் வந்தார். பல சந்திப்புகளை பல கட்சி தலைவர்களோடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசிற்கு 14 கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தோம்.

ரஜினியின் செல்வாக்கைப் பற்றி மக்கள் கருத்தைக் கேட்டறிந்த ஓர் அமைப்பு அவருக்கு மக்களிடையே 56 சதவீதம் ஆதரவு இருப்பதாக அறிவித்தது.

தமிழ்நாடு காங்கிரசின் நிர்வாகக்குழு என் தலைமையில் கூடி ஒருமனதாக வரவேற்றது. பல பணிகளுக்கிடையேயும் 3 முறை டெல்லி சென்று அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த நரசிம்மராவைச் சந்தித்தார் ரஜினி. அரசியல் ரீதியான சில வேண்டுகோள்களை வைத்து, தனது முழுமனதான ஆதரவையும் உழைப்பையும் தர முன் வந்தார். நரசிம்மராவ் ஏற்கவில்லை.

நான் காலைப் பிடிக்காத குறையாகக் கண்ணீர் மல்க மன்றாடினேன். எனக்குப் பதவி வேண்டாம், ஆனால் காமராஜ் தொண்டன் குமரி அனந்தன் தலைவராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தது என்று வரலாறு பதிக்கும் ஒரு வரி எனக்குப் போதும் என்று கெஞ்சினேன்.

ரஜினி சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். இன்றைக்கு வந்திருக்கும் அவப்பெயர் நீங்கியிருக்கும். ஆனால் நடக்கவே இல்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது. என்னிடம் இருக்கும் சில நிறைகளை மட்டும் கருத்தில் கொண்டு என் 80-வது பிறந்த நாள் பரிசாக என்பேரில் படிப்பகம் அமைக்க அனுமதி கேட்கிறீர்கள்.

படி, படி என்று படிக்கச் சொன்ன பெருந்தலைவரின் தொண்டனாகிய எனக்கு இதைவிட பெரிய பாக்கியம் வேறென்ன இருக்க முடியும்? எனவே அனுமதி தருகிறேன் என்பதை விட உங்கள் திட்டத்தை ஆசீர்வாதமாக ஏற்கிறேன்," என்றார்.

Tuesday, October 19, 2010

ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது..

ஒரு நூற்றாண்டை கடந்த

ஓவியத்தில் கண்ணீர்

கரை படிகிறது..

ஒரு நீண்ட கவிதை

கற்பனையிலேயே தீயிடபடுகிறது..

ஓராயிரம் இசைமீட்டிய

ஒரு யாழின் நூல்

அறுபடுகிறது..

ஒரு அடையாள சிற்பம்

புதை மணலின் மேல்

வைக்கப்படுகிறது..

ஒரு இன்பவியல் இலக்கியம்

கல்லறையில் தூங்க

வைக்கப்படுகிறது...

ஒரு கலை

கண்கள் கட்டப்பட்டு தூக்கிலிடபடுகிறது..

ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது

ஒரு சாத்தானால் அக்காதல்தத்தெடுத்துக் கொள்ளப்படுகிறது..

நிராகரிப்பு..

நிராசை..

துக்கம்..

அவமானம்..

இவைகளை கட்டித்தழுவி

முத்தமிடச் சொல்கிறது...

-வெங்கடேஷ் பாபு

Friday, September 10, 2010

இன்று விநாயகர் சதுர்த்தி


மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றும் தனிப்பெருந் தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர்களைப் போக்கும் அருட்கடல். அடியாருக்கு ஓடி வந்து அருள்புரியும் மூலாதார மூர்த்தி. வாழ்வில் உண்டாகும் இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார். "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார்.



விநாயகர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரங்கள் கொண்டவர். அவரை வழிபட்டால் ஏழு பிறவிகளும் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்ற சம்பத்துடன் வாழச் செய்வார். விநாயகரின் திருமேனி இடையில் கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும், ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் திருவுருவம் ஆகும்.



யானையை அடக்கும் கருவிகள் பாசமும், அங்குசமும் கையில் வைத்திருப்பவர். தன்னையடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் கைகளில் இக்கருவிகளை ஏந்தி நிற்கிறார். விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.



கரும்பு, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை,கொழுக்கட்டை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். விநாயகப்பெருமானுக்குரிய இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் அழகாக குறிப்பிடுகிறார். விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. இந்த அருகம்புல்லை அர்ச்சிப்பது விநாயக வழிபாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்கது. முமு முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த இந்த சதுர்த்தி நன்னாளிலே அவருடைய பாத கமலங்களை வணங்கி அருள் பெறுவோம்.

"பிள்ளையாரின் மகிமை''



ஆனை முகத்தோனே
ஆறுமுகத்துக்கு மூத்தவனே
உலகமென பெற்றோரை, நீ சுற்றியதால்
உலக மக்களே உன்னைச் சுற்றுகிறார்கள்



அலைபோல் கூட்டம் குமியும்
மலைபோல் தேங்காய்ச்சிதறல் குவியும்
உன் கோயில் இல்லாத ஊர் உண்டோ ?
உன்னைத் துதிக்காதவர் எவரும் உண்டோ ?



வைபவங்களில் முதல் மரியாதை உனக்குத்தான்
வையகத்தில் புண்ணியம் கிடைப்பதும், உன்னால்தான்
பிள்ளை இல்லாதவர்கூட பிள்ளை பிறந்திட,
உன்னைத்தானே தினமும் சுற்றுகிறார்கள்



விவசாயமோ, வியாபாரமோ, அனைத்திலும்
""பிள்ளையார் சுழியே உனக்குத்தானே''
கடலில் கடைசியில் உன்னைக் கரைப்பதே,
சுனாமியைத் தடுப்பதற்காகத்தானோ ?



காலமெல்லாம் கவலைகளை மறந்திடுவோம்
இருளை நீக்கி, அருளை அடைந்திடுவோம்
""பிள்ளையாரின் கருணையே வரப்பிரசாதம்''
""அனைவரும் வணங்குவோம் அவன்பாதம்''

Tuesday, September 7, 2010

இன்று தி.மு.க., பிரமாண்ட பொது கூட்டம்: முதல்வர் கருணாநிதி திருச்சியில் பங்கேற்பு


திருச்சி: புதிய கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழா மற்றும் மாலை நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் இன்று திருச்சி வருகிறார்.



முதல்வர் கருணாநிதி, இன்று அதிகாலை 5.15 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சி ஜங்ஷன் வருகிறார். அங்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான நேரு தலைமையில், தி.மு.க.,வினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்து, சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, காலை 10 மணிக்கு, புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். விழாவில், கலெக்டர் அலுவலகம் உட்பட 116.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 697 பணிகளை திறந்து வைத்தும், 192.18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிக்கு அடிக்கல் நாட்டியும், 8.36 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கியும், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 63.35 லட்ச ரூபாய் மதிப்பிலான 8,447 பேருக்கு வீடு வழங்கியும் முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.



திருச்சியில் பொன்மலை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், 169 கோடி ரூபாயில் நடக்கும் குடிநீர் திட்ட பணிகளில் 90 எம்.எல்.டி., திறனில் முதன் முதலாக 9 எம்.எல்.டி., தண்ணீர் விடும் பணியையும் துவக்கி வைக்கிறார். வெள்ளத் தடுப்பு திட்டத்தின் கீழ், 74 கோடி ரூபாயில் முடிக்கப்பட்ட 4 பேக்கேஜ் பணியை, முதல்வர் துவக்கி வைக்கிறார். மதியம் 12.30 மணி வரை நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மதியம் ஓய்வுக்கு பிறகு, மீண்டும் மாலை 5 மணிக்கு, கரூர் பை-பாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகில் நிறுவப்பட்டுள்ள, கருணாநிதியின் நண்பரும், மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கம் உருவசிலையை திறந்து வைக்கிறார்.



மாலை 6 மணிக்கு, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடக்கும் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இன்று இரவு முதல்வர் திருச்சியில் தங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். நாளை காலை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தலாம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் கூட்டணி விவகாரம், உட்கட்சி பூசல் குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.