2010 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் : வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது


ஜோகனஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில் 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து போட்டி, கோலாகலமாக துவங்கியது. பாரம்பரிய உடையுடன் கூடிய நடனம், வித்தியாசமான அணிவகுப்பு என, ஆப்ரிக்க நாடுகளின் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக நிகழ்ச்சிகள் இருந்தன. சர்வதேச கால்பந்து அமைப்பின் (பிபா) சார்பில் நடத்தப்படும், 19 வது பிபா உலக கோப்பை கால்பந்து தென் ஆப்ரிக்காவில் துவங்கியது. இதற்கான துவக்கவிழா, இன்று ஜோகனஸ்பர்க்கின் "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்தது. இதில் தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டெரான் கலந்து கொண்டனர்.



முதலில் தென் ஆப்ரிக்க பாரம்பரிய உடையுடன் தோன்றிய இசைக்கலைஞர் பாடிக்கொண்டே வர, பின்னணியில் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள், உலக கோப்பை துவங்கியதை குறிக்கும் வகையில் இசை எழுப்பினர். அப்போது வானில் ஐந்து "ஜெட்' விமானங்கள் அணிவகுத்து சென்றது பார்க்க ரம்யமாக இருந்தது. இந்த உற்சாகத்தில் நோபல் பரிசு வென்ற, தென் ஆப்ரிக்காவின் ஓய்வு பெற்ற "ஆர்ச்பிஷப்' டெஸ்மாண்ட் டுடு, நடனம் ஆடி ஆரவாரம் செய்தார். இதையடுத்து மைதானத்தில் வைக்கப் பட்டிருந்த "ஜபுலானி' கால்பந்தை, ராட்சத வடிவிலான செயற்கை வண்டு, தனது கைகளால் உருட்டிக்கொண்டு சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது.



மண்டேலா செய்தி: அடுத்து நடன கலைஞர்கள் தென் ஆப்ரிக்கா வரைபட அமைப்பில் அணிவகுத்து நின்றனர். அப்போது மைதானத்தில் இருந்த பிரமாண்ட திரையில், முன்னாள் அதிபர் மண்டேலாவின் உருவப்படம், ஒளிபரப்பப்பட்டது.



மைதான அமைப்பு: பின் நடன கலைஞர்கள் இணைந்து "சாக்கர் சிட்டி' மைதான அமைப்பு போல, உருவாக்கி அசத்தினர். அப்போது பிரபல அமெரிக்க பாடகர் ஆர்.கெல்லி, தென் ஆப்ரிக்காவின் ஹக் மசகேலா ஆகியோரது நடன நிகழ்ச்சி, 1500 கலைஞர்களுடன் நடந்தது.



ஆப்ரிக்க அணிவகுப்பு: அடுத்து இத்தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்கா, நைஜீரியா, காமரூன் உள்ளிட்ட ஆறு ஆப்ரிக்க நாடுகளின் மர வடிவிலான சின்னம், மைதானத்தில் வைக்கப் பட்டது. பின் அல்ஜீரிய பாப் பாடகர் காலேத், நைஜீரிய நட்சத்திரம் பெமி குட்டி, டிமோத் மொலோய் இவர்களுடன் கெல்லியும் சேர்ந்து, அசத்தலான நிகழ்ச்சியை வழங்கினர். போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகளின் சுழலும் வகையிலான தேசிய கொடியை மைதானத்தில் வைத்தனர். இந்த கொடி சுழன்று கொண்டே இருக்க, நடன கலைஞர்கள் ஒவ்வொரு நாட்டின் பெயரையும் உச்சரித்துக் கொண்டே, நாட்டின் பெயரை மைதானத்தில் தோன்ற செய்தனர். இறுதியில் 19வது உலக கோப்பை தொடரின் "லோகோ' போல் அணிவகுத்து நிற்க, 40 நிமிட துவக்க விழா நிறைவுற்றது.

மண்டேலா "ஆப்சென்ட்': துவக்கவிழா மற்றும் தென் ஆப்ரிக்கா அணி விளையாடும் முதல் போட்டியை காண, தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா வருவதாக இருந்தது. ஆனால், இவரது 13 வயது கொள்ளுப் பேத்தி ஜினானி மண்டேலா, சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்த சோகத்தில் இருந்த மண்டேலா, போட்டியை காண வரவில்லை.

Post a Comment

0 Comments