மாஜி விடுதலைப் புலிகள் 53 பேருக்கு திருமணம்

கொழும்பு : வவுனியாவில் முன்னாள் விடுதலைப் புலிகள் 53 பேருக்கு, இலங்கை ராணுவம் சார்பில் நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.இலங்கையில் கடந்தாண்டு நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், ஏராளமான விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கு இலங்கை ராணுவம் சார்பில், வவுனியா உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் சுயதொழில், புனர்வாழ்வு மற்றும் உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி முடிந்தவர்கள், படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், பயிற்சிகள் முடித்த முன்னாள் விடுதலைப் புலிகள் 53 பேருக்கு, வவுனியா, பம்பைமடுவில் உள்ள முகாமில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை ராணுவம் செய்திருந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் இடம் பெற்று இருந்ததால், அந்ததந்த மத முறைப்படி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.நிவாரண முகாமின் கமிஷனரும், ராணுவ அதிகாரியுமான சுதந்தா ரணசிங்கே கூறுகையில்,"தற்போது திருமணம் செய்து வைக்கப்பட்ட ஜோடிகளில் சிலர், ஏற்கனவே திருமணம் முடித்துக் கொண்டவர்கள். இருந்தாலும், அது சட்டப்பூர்வமான திருமணம் அல்ல. தற்போது நடந்த திருமணங்கள் தான் சட்டப்பூர்வமானவை. இதற்கான சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்பட்டது' என்றார்.

Post a Comment

0 Comments