87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி


சென்னை : ""எனக்கு 87 வயதானாலும் தமிழர் தன்மானத்தையும், திராவிடர் இயக்கத்தையும் கட்டிக்காப்பதில் நான் ஒரு இளைஞன்தான்,'' என தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி பேசினார்.




தென்சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவான்மியூரில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 1944ம் ஆண்டுக்கு முன்பே நானும், அன்பழகனும் சந்தித்தோம். எங்களிடம் ஏற்பட்ட நட்புரிமை காரணமாக இருவரும் இணைந்து, அண்ணா தலைமையில் கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டோம். ஒரு இயக்கம் என்பது வீடு, குடும்பம்போல. பெரியாரால் வளர்க்கப்பட்ட கழகத்தில் சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் அவ்வப்போது எழுந்ததுண்டு. அந்த மாறுபாட்டை உருவாக்கியவர்களை கழகம் திருத்தியுள்ளது. அப்போதெல்லாம் இந்த கழகம் ஈட்டிமுனை போல செயல்பட்டது. இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.




இந்த இயக்கம் இருக்கக்கூடாது என, சட்டமே கொண்டு வரப்பட்டது. நான், இந்த இயக்கத்தின் தலைவர் என்ற கர்வம் எனக்கு எப்போதும் இருந்தில்லை. நான், கழகத்தை வழி நடத்துவதன் பலம் தொண்டர்களிடம் இருந்து கிடைத்தது. திருச்சி கூட்டத்தில் பெரியார் பேசியபோது, "அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றில் கட்டுப்பாட்டை மட்டும் விட்டுவிடாதீர்' என்றார். அவர் சொன்ன வார்த்தைகளை தொண்டர்கள் இறுதிவரை கடைபிடிப்பதால், இந்த இயக்கத்தை கடைசி வரை அசைக்க முடியாது. கட்சியின் வலிமைக்கும், பெருமைக்கும் தொண்டர்களாகிய நீங்களே காரணம். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைப்பவர்களுக்கு நாங்கள் தரும் பதில்,"இது பாறை, இதில் முட்டுபவர்களுக்கு ரத்தம்தான் வரும். எத்தனையோ தேர்தல்களில் வெற்றிகள் பெற்றாலும், அதை பெற்றுத் தந்த தொண்டர்களை நான் என்றும் மறக்க மாட்டேன். அப்படி மறந்தால் நான் கருணாநிதி இல்லை. இந்த கட்சியும் இல்லை. எல்லாரும் சேர்ந்துதான் இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். தி.மு.க., என்ற அகல் விளக்கை இரண்டு கைகளாலும் பொத்தி, ஒளியை நாட்டிற்கு வழங்க வேண்டும்.




நீங்கள் தரும் வெற்றி, மமதையை ஏற்படுத்தவில்லை. மேடையில் இருப்பவர்கள்தான் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் தொண்டர் என்று இல்லை. நாளை நீங்களும் மேடைக்கு வரலாம். எனக்கு 87 வயது ஆனாலும், தமிழர் தன்மானத்தையும், திராவிட இயக்கத்தையும் கட்டிக் காப்பதில் ஒரு இளைஞன்தான். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், பரிதி இளம்வழுதி, கனிமொழி எம்.பி., நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், தென்சென்னை மாவட்ட செயலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்திராநகர் ரவி வரவேற்றார்.

Post a Comment

0 Comments