வரலாற்று முக்கியத்துவ நட்பு : அமெரிக்கா பெரும் ஈடுபாடு


வாஷிங்டன் : இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா மிகவும் முக்கியத்துவம் அளித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.




இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ள சூழ்நிலையில், கிருஷ்ணாவின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதத்தை தடுப்பதற்கான ஒத்துழைப்பு, பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து அமெரிக்க - இந்திய பிரதிநிதிகள் விரிவாக பேச்சுநடத்தவுள்ளனர். ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பினராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசப்படும். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியுடனான சந்திப்பின்போது, அமைச்சர் கிருஷ்ணா இந்த பிரச்னை குறித்து அதிகமாக வலியுறுத்துவார். அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகனும் முன்பு வெள்ளை மாளிகை முன் அமைந்த அழகான புல்வெளிப் பரப்பில் சந்தித்ததைப் போல இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. அதற்காகவே அங்குள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர்.




ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில் பெர்க் உட்பட இப்பட்டியல் பிரமாண்டமானது. இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நிரந்தரமான வலுவான மேம்பட்ட நட்புறவு பற்றிப் பேசுவதால், அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்க அதிபர் ஒபாமாவும் அப்பேச்சின் ஒரு கட்டத்தில் பங்கேற்கிறார். குறிப்பாக சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் வர்த்தம், பாதுகாப்பு விஷயங்களில் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கருதுவதால் இந்த அளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று மீடியாக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. இவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

Post a Comment

0 Comments