ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மை எரிப்பு


சென்னை: ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு சம்பவம் நடந்தது. சென்னையில் வைகோ உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர் அதே ஆதரவு அலையுடன் மீண்டும் இலங்கையில் பெருவாரியான வெற்றி வித்தியாசத்தில் அதிபரானார். எதிர்த்து நின்ற எதிர்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதிபர் பொறுப்பேற்றதும் நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கில் முகாம் என்ற பெயரில் அடைக்கப்பட்டனர். இதில் முகாம் தமிழர்களை மீள் குடியேற்றம் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கையை ராஜபக்ஷே ஏற்று , ஒரளவுக்கு மீள்குடியேற்றம் செய்தார். இன்னும் பலர் முகாம்களில் உள்ளனர்.

இந்நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக ராஜபக்சே இந்தியா வருகிறார். டில்லியில் பிரதமர், மன்மோகன்சிங் , காங்., தலைவர் சோனியா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இருநாட்டு நட்புறவு மற்றும் பொருளாதாரத்தில் வர்த்தக ரீதியான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கிறார்.


எம்.பி.,க்கள் குழு கருணாநிதி அனுப்பினார் : இதற்கிடையில் தமிழர்கள் மீள் குடியேற்றம் தொடர்பாக பிரதமருக்கு வலியுறுத்தும் கடிதம் ஒன்றை முதல்வர் கருணாநிதி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனுப்பியுள்ளார். தி.மு.க., - காங்., உள்ளிட்ட எம்.பி.,க்கள் குழுவினர் கருணாநிதி உத்தரவின் பேரில் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

பக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் , ம.தி.மு.க., , இந்திய கம்யூ., விடுதலைசிறுத்தைகள், புதிய தமிழகம், சிவசேனா, நாம் தமிழர் இயக்கம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர் இன்று ( செவ்வாய்கிழமை ) ஆர்ப்பாட்டம் , மறியல், பேரணி என எதிர்ப்பு ஆயுதங்களை கையிலெடுத்துள்ளனர். பல இடங்களில் பக்ஷேவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டன. கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.


கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் வைகோ- பழநெடுமாறன் கைது : சென்னையில் ஆழ்வார் பேட்டையில் உள்ள நாகேஸ்வரராவ் பார்க் அருகில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ தலைமையில் பழநெடுமாறன், திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் மற்றும் ம.தி.மு.க., தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து வைகோ உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சாஸ்திரி பவன் அருகே போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டார். திருச்சி, மதுரை, திருப்பூர், கரூர் , நெல்லை , விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட பெருநகரங்களில் ஆர்ப்பாட்டம் மறியல் என நடந்து வருகிறது.


விருதுநகரில் தென்காசி இ.கம்யூ., கட்சி எம்.பி., லிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ., ராமசாமி ஆகியோர் தலைமையில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இங்கு தமிழ்புலிகள் இயக்கத்தினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் தமிழர் நல இயக்கத்தினர் பல இடங்களில் எதிர்ப்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில் இலங்கை தேசிய கொடி எரிப்பு : மதுரையில் ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் வக்கீல்கள் அமைப்பினர் மனோகரன் தலைமையில் போராட்டம் நடத்தினர். கோர்ட் வளாகம் அருகே இலங்கை தேசிய கொடியை எரித்தனர்.

Post a Comment

0 Comments