பெண்ணாய் பிறந்ததால் உதறினாளோ தாய்?


கோவை : பத்துமாதம் சுமந்தாலும், அந்த பந்தத்தையும் மீறி, இரக்கமின்றி சாக்கடையில் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் கொடூரத்தாய்மார்கள் உருவாகி வருகின்றனர். கோவையில் பல பெண்களிடம் அதிகரித்து வரும் இந்த ராட்சஷ போக்கால் மாதம் ஒரு குழந்தையாவது அரசு மருத்துவமனையில் அடைக்கலம் தேடி வருகிறது.




கோவை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் ஐந்து மாதங்களில் ஏழு குழந்தைகள் தஞ்சமடைந்துள்ளன. பிறந்த ஒரே நாளில் பெண் குழந் தை ஒன்று, நேற்று வந்து சேர்ந்தது. இக்குழந்தையையும் சேர்த்து இந்தாண்டில் மட்டும் எட்டு குழந்தைகளை தவிக்க விட்டுள்ளனர் தாய்மார்கள். ஜனவரியில் இருந்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூன்று குழந்தைகள், புறநகர் பகுதியில் உள்ள முட்புதர், நகரில் உள்ள குப்பை தொட்டி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகம், உடுமலை அரசு மருத்துவமனை வளாகம் என ஏழு குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சாக்கடை கால்வாயில் ஒரு பெண் குழந்தை நேற்று கிடைத்துள்ளது. இதுவரை எட்டு குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஒரு குழந்தை மட்டும் இறந்தது. ஆறு குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டன. நேற்று அனாதையாக்கப்பட்ட அழகான பெண் குழந்தை, அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு செவிலியர் பராமரிப்பில் உள்ளது.




கோவை, கூட்ஷெட் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் பின்புற நுழைவாயில் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில், நேற்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவ்வழியாக சென்றவர்கள் சாக் கடை கால்வாயில் பார்த்த போது அழகான பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஒப்படைத்தனர்; செவிலியர் பராமரித்து வருகின்றனர்.




அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் சிவப்பிரகாசம் கூறுகையில், ""பிறந்து 24 மணி நேரத்தில் இக்குழந்தை அனாதையாக்கப்பட்டுள்ளது. குழந்தையை பரிசோதித்ததில் நல்ல நிலையில் தான் உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை எட்டு குழந்தைகள் கோவையில் அனாதைகளாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் தாங்களாகவே திருந்தினால் மட்டுமே குழந்தைகள் அனாதைகளாக்கப்படுவது தடுக்கப்படும். போதிய மருத்துவ சிகிச்சை அளித்து உரிய முறையில் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கபடும்,'' என்றார். குழந்தையை அனாதையாக சாக்கடையில் வீசிச்சென்றவர்கள் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

Post a Comment

0 Comments