தன்னைத் தானே புகழ்ந்து கொண்ட ஜெ., தஞ்சை மாநாட்டை சுட்டிக்காட்டி கருணாநிதி சாடல்


சென்னை : "சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தையும் இணைத்து, நம் முன்னோருக்கு நான் செலுத்திய காணிக்கை எங்கே? தஞ்சை மாநாட்டில் இவர்கள் தயாரித்துக் கொண்ட தற்புகழ்ச்சி பாடல் எங்கே?' என, தமிழக முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை: தமிழுக்கு வலிவும், பொலிவும் சேர்த்து, உலகத்தினர் வழங்கும் வாழ்த்துக்களைக் குவிக்க, குமணனை ஒத்த வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில் விழா எடுக்கிறோம். தமிழ் விழாமல் இருக்க விழா; அந்த விழா தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.


எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறதா? ஏதோ ஒரு விலங்கின் காம்போதி என்பார்களே; அந்தக் காம்போதி தான் கேட்கிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவாம். தஞ்சையில் அன்றொரு நாள் உலகத் தமிழ் மாநாடு நடத்தி, தன் பெயரை வைத்தே, தமிழ்த் தாய் வாழ்த்து தயாரித்து பாடிய தையலார் யார் என்பது மறந்துவிட்டதா? "அவ்வை ஆண்டாள் அம்மையுமே அழகுறப் பாடி தமிழ் வளர்த்தார்; அன்னை முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து வளர்க்கின்றார்; பாரதத் தாயும் தமிழ்த் தாயும் பாங்குடன் சேர்ந்து மிளிர்வது போல், வாராது வந்த மாமணியாம் வாழ்க அன்னை ஜெயலலிதா.'


இப்படி தன்னையே, தமிழ்த் தாய் என்றும், வாராது வந்த மாமணி என்றும் பாட்டு போட்டு, பாடிக் கேட்டு, பரவசப்பட்டவர்களுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தையும் இணைத்து, இறவாப் புகழ் கொண்ட நம் முன்னோருக்கு நான் செலுத்திய காணிக்கை பாடல் எங்கே? தஞ்சை மாநாட்டில் இவர்கள் தயாரித்துக் கொண்ட தற்புகழ்ச்சி பாடல் எங்கே? இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments