சித்தணி ரயில் சதியும்; சில சந்தேகங்களும்

சித்தணி ரயில் பயங்கரம் தொடர்பாக கியூ பிரிவு போலீசாரின் விசாரணை செல்லும் திசை, பல கேள்விகளை எழுப்பி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே, கடந்த 12ம் தேதி அதிகாலை, ரயில்வே தண்டவாளத்தை மர்ம நபர்கள் வெடிவைத்து தகர்த்தனர். இவ்வழக்கு விசாரணை, கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.சேலம் - சென்னை ரயில் கார்டு ராஜசேகர், டிரைவர் சேகரன், பேரணி ரயில் நிலைய அதிகாரி ருத்திரபாண்டி, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் கோபிநாத் ராவ் மற்றும் சித்தணி, பேரணி பொதுமக்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையின் முடிவில் ஏற்பட்டுள்ள குழப்பம், போலீசாருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் ஒழுங்கு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "சேலம் - சென்னை ரயில் கடந்து சென்ற பிறகே குண்டு வெடிப்பு நடந்துள்ளது' என்ற முடிவுக்கு வந்தனர்.



ஆனால், கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் தலைகீழ் திருப்பமாக, "குண்டு வெடித்த பிறகே சேலம் - சென்னை ரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றது' எனக் கூறப்படுகிறது. இதுதான் ரயில்வே பாதுகாப்பு மற்றும் ஆபரேஷன் பிரிவு அதிகாரிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆனால், "மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றதாலும், மறுபக்க தண்டவாளம் நன்றாக இருந்ததாலும் பெட்டிகள் பத்திரமாக கடந்து சென்றுவிட்டன. நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் நடந்தது' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.



இது தொடர்பாக, ரயில்வே தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: குண்டு வெடிப்புக்குப் பின், 98 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு (மூன்றே கால் அடி) தண்டவாளம் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஒரு ரயில் இன்ஜின் சக்கரத்தின் விட்டம் 109.2 சென்ட்டி மீட்டர். அடுத்து வரும் பெட்டிகளின் சக்கர விட்டம் 91.5 சென்ட்டி மீட்டர். ஒரு ரயில் இன்ஜினின் சராசரி எடை 100 டன்.சேலம் - சென்னை ரயிலில் மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. 98 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஒரு பக்க தண்டவாளமே இல்லாத தடத்தை, 100 டன் எடை கொண்ட இன்ஜினும், 20 பெட்டிகளும் பத்திரமாக கடந்து சென்றன என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது."குண்டு வெடிப்பால் தண்டவாளம் சிதறவில்லை; மூன்றாக விரிசல் விட்ட பிறகும், ஒட்டிக்கொண்டிருந்தது; அதனால், ரயில் சென்றுவிட்டது' என்பது போலீசாரின் வாதமானால், ரயில் கடந்த பிறகு, அந்தத் துண்டுகள் அங்கேயே தான் கீழே விழுந்திருக்க வேண்டும். ஆனால், மூன்று துண்டுகளும் 40 அடி தூரம் தள்ளி கிடந்தது எப்படி?



சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக கடந்த மறு விநாடியே குண்டு வெடித்தது என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். குண்டு வெடித்த பிறகே ரயில் கடந்தது என்பதை ஒருபோதும் ஏற்பதற்கில்லை என்பது ரயில்வே அதிகாரிகளின் முடிவு.



இவ்வளவு திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்தும், போலீசார் பிடிவாதமாக இருப்பதன் பின்னணி என்ன என விசாரித்தால், புதுக்கதை வருகிறது. "குண்டு வெடிப்புக்கு பிறகே சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், சம்பவ இடத்தைக் கடந்து சென்றிருக்கும்' என்ற தகவலை கியூ பிரிவு போலீசார் தான், சில பத்திரிகை நிருபர்களிடம் தாமாக முன்வந்து தெரிவித்திருக்கின்றனர். இதில் தான் முதல் சந்தேகம் எழுகிறது.குண்டு வெடித்தது எப்போது என்பதை விட, குண்டு வைத்தது யார் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது கேள்வியைப் பின்னுக்குள் தள்ளி, குண்டு வெடித்த நேரத்திலேயே போலீசார் குறியாக இருப்பதன் காரணம், சிதம்பர ரகசியம் இல்லை.



சேலம் - சென்னை எக்ஸ்பிரசுக்குப் பிறகு வந்த மலைக்கோட்டை ரயிலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பயணிப்பதாக இருந்தது. முதல்கட்ட விசாரணையில், "அவரைக் குறிவைத்து தான் இந்தத் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கும்' என சந்தேகிக்கப்பட்டது.ஆனால், "சேலம் - சென்னை எக்ஸ்பிரசை குறிவைத்து தான் குண்டு வைக்கப்பட்டது; மலைக்கோட்டை ரயில் அவர்களது இலக்கே இல்லை' என்பதை நிரூபிப்பதன் மூலம், "சிதம்பரம் குறிவைக்கப்படவில்லை' என, மாநில போலீசார் ஸ்தாபிக்க முடியும். "இதன் தொடர்ச்சியாக, மத்திய உளவுத்துறையின் நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம்' என்பது போலீசாரின் சிந்தனை.இரண்டு வாய்ப்புகளில் எது உண்மையாக இருந்தாலும், வியாசர்பாடி ரயில் கடத்தல் சம்பவம் போல் இல்லாமல், சதிக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் சரி!

Post a Comment

0 Comments