இன்டர்நெட் பயன்கள் பாமரனை அடைய வேண்டும் : கனிமொழி எம்.பி., பேச்சு


கோவை : ""செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் இணையதள மாநாட்டின் வாயிலாக, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், இன்டர்நெட்டின் பயன்களை பாமர மக்களும் அறியும்படி செய்ய வேண்டும்,'' என்று கனிமொழி எம்.பி., பேசினார். கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இணையதள மாநாடும் நடத்தப்படவுள்ளது. இணையதள மாநாட்டில் பங்கேற்கவும், அதையொட்டி நடைபெறும் கண்காட்சியை பார்வையிடவும் வருபவர்களைக் கையாள்வது குறித்து கனிமொழி எம்.பி., தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் டேவிதார், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் மாணவ ஆர்வலர்களிடம் விளக்கினர்.


கனிமொழி எம்.பி., பேசியதாவது: இதுவரை எட்டு இணையதள மாநாடுகள் நடைபெற்றுள்ளன. கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி ஒன்பதாவது இணையதள மாநாடு நடைபெறுவது சிறப்பானது. இன்று தகவல் தொழில் நுட்பத்துறையில் நாம் முன்னேறியவர்களாக உள்ளோம். இத்துறையின் பயன்கள் அனைவரையும் சென்றடைய, மாணவர்கள் உதவ வேண்டும். மாநாட்டில் பங்கேற்க வரும் பொதுமக்களுக்கு, கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சல் அடையாமல், பொறுமையுடன் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். இம்மாநாட்டின் வாயிலாக இன்டர்நெட், தகவல் தொழில் நுட்பத்தின் பயன்கள் பாமர மக்களை சென்றடையச் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் தெரியாத எவரையும் கிண்டல் செய்து விடக்கூடாது. இவ்வாறு கனிமொழி பேசினார்.

Post a Comment

0 Comments