தமிழகத்தில் நூறு சமுதாய கல்லூரிகள் துவக்கப்படும் : அமைச்சர் பொன்முடி


காரைக்குடி : ""தமிழகத்தில் தொழில்திறனை வளர்க்க செப்டம்பரில் நூறு சமுதாயக்கல்லூரிகள் துவக்கப்படும் என'', காரைக்குடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். காரைக்குடி அழகப்பா பல்கலையில், இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாடு நடந்தது. துணைவேந்தர் ராமசாமி வரவேற்றார்.


அமைச்சர் பொன்முடி பேசியதாவது: அரசின் தற்போதைய குறிக்கோள் உயர்கல்விபெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும். இதற்கான தரத்தை உயர்த்த பல்கலைகள் கருவியாக செயல்படவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பட்டதாரியாவது உருவாகவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறது. தமிழகம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. வேலைவாய்ப்பு வழங்க,தொழில்மயமாதல் அவசியம்.


தொழில்மயமாதலுக்கு விவசாய நிலங்களை பயன்படுத்தியே ஆகவேண்டும். இம்முரண்பாட்டை எவ்வாறு சமாளிப்பது என ஆராய்ச்சி செய்யவேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கவேண்டும். தமிழகத்தில் தொழில்திறன்களை வளர்க்க நூறு சமுதாய கல்லூரிகள் செப்டம்பரில் துவக்கப்படும். கல்வி தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும், என்றார்.


மதுரை காமராஜ் பல்கலை பரம்பரையியல் துறை தலைவர் பி.குணசேகரனுக்கு அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் துறையில் சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பொன்னம்பல அடிகள், அமைச்சர் பெரியகருப்பன், கர்நாடகா பல்கலை துணைவேந்தர் சீனிவாஸ் கே.சைதாபூர், இந்திய பல்கலை கூட்டமைப்பு பொது செயலாளர் பீனாஷா, தேர்வாணையர் மாணிக்கவாசகம் பங்கேற்றனர்.


கருத்தரங்கில், முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், கன்னியப்பன், மருதமுத்து, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் அருணா ஆகியோர், பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பதிவாளர் செண்பகவல்லி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments