தமிழை வழக்கு மொழியாக்க கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கோவை : தமிழை, ஐகோர்ட் வழக்கு மொழியாக்க வலியுறுத்தி, கோவையில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்; ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐகோர்ட் வழக்குகளில் வாதாட, தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டுமென, நீண்ட நாட்களாக வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2006ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை இத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.


இதை கண்டித்து மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் வக்கீல்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதே கருத்தை வலியுறுத்தி, நேற்று கோவையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.


வக்கீல் சங்க தலைவர் நந்தகுமார், செயலர் ஆனந்தன் தலைமையில், வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் கூடினர். வக்கீல் சங்க அலுவலகம் முன், செம்மொழியான தமிழை ஐகோர்ட் வழக்கு மொழியாக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோர்ட் வளாகத்தில் கோஷமிட்டபடியே ஊர்வலமாக சென்ற வக்கீல்கள், அரசு கலைக்கல்லூரி ரோடில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பால், நேற்று நடக்கவிருந்த வழக்கு விசாரணைகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

Post a Comment

0 Comments