வஞ்சிப்பூவின் மணம் வீச ...

சதுரங்க பலகையில்
எம் திசையில்
யாம் விடுதலையின் பூக்கள் நட்டு கொண்டிருந்தோம்..

மறுதிசையில் புத்தம் அறியா
புத்த தேசத்திலிருந்து வெறுப்பும் விரோதமும் வளர்த்த குதிரைகளும்,யானைகளும்
எம் திசை நோக்கி பாய்ந்தன.


சிறியோரை இகழ்தல் இலமே
எனினும்,
சதுரங்க பலகையின் போர் மரபு மீறி
கட்டங்கள் தாண்டிய உம்
படை குறித்து வேறென்ன செய்ய??

வரலாற்றில் விடுதலைக்காய் நிகழ்ந்த
எல்லா போர்களின் நிழலும்
எம் மண் மீது விழ,
தும்பை பூவின் மணம்
எம் தெருவெங்கும் நிறைந்தது.

உம் படையின் பிணங்களை
எம் விடுதலைக்கு எதிரான
அடுத்த ஒரு தேசம் ஆள் இட்டு நிரப்பியது..


எம் படையின் பிணங்கள் தின்ன
பருந்துகளும் பறக்கா வன்னம்
எம் நிலத்தின் மேல் குண்டு வீச்சு நடந்தது..


சதுரங்க பலகைகளும்
நான்கு திசைகளும் இருக்கும் வரை
யுத்தங்கள் ஓயா
என்பதையறியா உம் படைகள்,
எம் கல்லறைகள் நிரம்பி
உம் நிலம் நோக்கி நகர்ந்த
ஒரு பொழுதில் எமை வென்றதாய்
சொல்லி ஓய்ந்தது..

என்றோ ஒரு நாளில்
எம் திசையிலிருந்து
வஞ்சிப்பூவின் மணம் வீச,
எம் விடுதலையின் கனவு
துப்பாக்கி சத்தத்தில் கலையவில்லை
என்றறிவாய் பகைவனே.


---ஜெயசீலன்

Post a Comment

2 Comments

premkumar.raja@gmail.com