தமிழில் படித்தால் அரசுப் பணி: தயாராகிறது சட்ட முன்வடிவு

சென்னை, ஜூலை 3: தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை தயாரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் விவரம்:

பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள்: தமிழக அரசு சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் (Genetic Gardens)அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பற்றி பேசப்பட்டது. இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி.யோடு கலந்து பேசியிருப்பதால், அவர் தில்லியில் இருந்து திரும்பியதும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பூங்காக்களை தொடங்குவதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த பதினைந்து நாள்களுக்குள் அது பற்றிய அனைத்து விவரங்களும் முதல்வரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் வேளாண்மைத் துறை செயலாளர் பதிலளித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்னை - பிரதமருக்கு விரைவில் முதல்வர் கடிதம்: இலங்கைத் தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு காண மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து கடந்த வாரம் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் தமிழ் ஆட்சி மொழி: மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து பேசிய போது, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீது விவாதம் கோரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விவாதித்த போது, இதுகுறித்து ஏற்கெனவே முதல்வர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு 2006-ம் ஆண்டிலேயே அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு, மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை அணுகி வலியுறுத்த வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் மொழிக்கும் கூடுதல் நிதி உதவி: பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, எந்த அளவுக்கு செலவு செய்கிறது என்பதை பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு, தேவையான திட்டக் குறிப்புகளுடன் தமிழ் மொழிக்கும் கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசை அணுகுவதென்று முடிவெடுக்கப்பட்டது.

இந்திய தேசியக் கல்வெட்டியல் நிறுவனம்: இந்திய தேசியக் கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டுமென்ற தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மத்திய அரசுக்கு ஏற்கெனவே முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தை நினைவுபடுத்துவதென்றும், இதற்காக தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனின் முயற்சிகளை கோருவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரி கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்வது தொடர்பாக பேசியபோது, இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களுடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமருக்கு, முதல்வரிடம் இருந்து நேர்முக கடிதம் அனுப்புவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாகத் தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில், இதுகுறித்து தலைமைச் செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும் என்ற முடிவு குறித்து விரிவாகப் பேசப்பட்டது. சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை தயாரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.

÷இக்கூட்டத்தில் நிதியமைச்சர் க.அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி மற்றும் பல்வேறு அரசு துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments