கால் பாதங்களை பதித்து மிகப் பெரிய ஓவியம்: கின்னஸ் சாதனை முயற்சி


புதுச்சேரி : மிக நீளமான கார்ட்டூன் வரைவது, கால் பாதங்களை பதித்து மிகப் பெரிய ஓவியம் வரைவது போன்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகள் ஆச்சார்யா பள்ளியில் நேற்று துவங்கியன. புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் உள்ள ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அண்ணாமலை, உலகின் மிக நீளமான கார்ட்டூன் ஓவியத்தை தனி நபராக வரையும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நேற்று காலை 5.30 மணிக்கு துவக்கினார். சாதனை நிகழ்ச்சியை பள்ளியின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் துவக்கி வைத்தார். 6.5 அங்குல உயரமும், 120 மீட்டர் நீளமும் கொண்ட கார்ட்டூன் ஓவியத்தை மாணவர் அண்ணாமலை வரைந்தார். இதேபோல் வில்லியனூர் சிக்ஷா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கால் பாதங்கள் மூலம் உலகின் மிகப்பெரிய ஓவியம் வரையும் கின்னஸ் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.



உலகம் வெப்பமடைவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளிலிருந்து மனித இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், கால் பாதங்களை வைத்து ஓவியம் வரையும் சாதனை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. எல்.கே.ஜி., முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் 2825 மாணவ, மாணவியரும், ஆச்சார்யா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் 100 மாணவர்களும் தங்களது கால் பாதங்களை வண்ணங்களில் தோய்த்து பிரமாண்டமான துணியில் பாதங்களை பதிய வைத்து புதுவிதமான ஓவியத்தை வரைந்தனர். கால் பாத அச்சுக்கள் மூலம் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நாளை நிறைவடைகிறது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மணி விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments