ஆந்திராவுக்கு படையெடுக்கும் போலி டாக்டர்கள்

தமிழக அரசு நடத்தி வரும் அதிரடி ரெய்டால் "கிலி' பிடித்த போலி டாக்டர்கள் தங்களது இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றி வருகின்றனர். பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு பிரபல டாக்டர்களிடம் பணியாற்றுபவர்கள் பின்னர் தங்களுக்கென்று ஒரு "கிளினிக்'கை துவக்கி விடுகின்றனர். நோயாளிகளிடம் 10 ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்ப்பதால் இவர்களிடம் கூட்டம் அதிகளவில் குவிந்தது.



திருவள்ளூர் மாவட்டம் அதிகளவில் கிராமங்களை கொண்ட பகுதி. ஆந்திர மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் குறைவாக உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் போதுமான அளவு டாக்டர்கள் இல்லை. இந்நிலையில், ஒவ்வொரு கிராமங்களிலும் "டுபாக்கூர்' டாக்டர்கள் புற்றீசல் போல் பெருகி வந்தனர். மருத்துவம் பெறுபவர்களுக்கு, அதிக வீரியம் கொண்ட, பக்க விளைவுகள் ஏற்படும் மருந்துகளை கொடுக்கின்றனர். நோயாளியும் உடனடியாக குணமாகிறார். அதிக வீரியமிக்க மருந்தால் நோயாளிகள் பக்க விளைவுகளையும் சந்திக்கின்றனர். சிறிது காலத்திற்கு பின்னரே இந்த விளைவு தெரியும் என்பதால், உடனடியாக நோயாளிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இருப்பினும், நோய் குணமான தகவல், காட்டுத் தீ போல் பரவி, பொதுமக்கள் அதிகளவில் இவர்களிடம் மருத்துவம் பார்க்கக் குவிகின்றனர். டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல், சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவிய நேரத்தில் இவர்கள் வழங்கிய மாத்திரைகளால் பக்க விளைவு ஏற்பட்டு, பொதுமக்கள் பெருமளவு பாதித்தனர். பாதித்தவர்கள் தாங்கள் எவ்வாறு பாதித்தோம் என்பது கூடத் தெரியாத நிலையில் உள்ளனர்.



இந்நிலையில், தமிழக அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் போலி டாக்டர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. ஒவ்வொரு கிராமங்களிலும், இதுபோன்ற கணக்கெடுப்பு நடந்தது. சில தினங்களுக்கு முன் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடியாக மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் சோதனை நடத்தியதில் 171க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை புறநகர் பகுதியில் 10 பேர், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலி டாக்டர்கள் பலர் சிக்கினர். சிலர் தப்பித்துக் கொண்டனர். இவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் மாட்டிக் கொண்டனர். திடீர் ரெய்டு குறித்து செய்தி அறிந்த இவர்கள் வெளியே வராமல் தலைமறைவாயினர். தினமும் அதிகளவு பணத்தை பார்த்தவர்கள், தற்போது தமிழக-ஆந்திர எல்லையில் தங்களது இடத்தை மாற்ற முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்த போலி டாக்டர்கள் அருகில் உள்ள ஆந்திர மாநிலத்திற்கு தங்களது இடத்தை மாற்றி வருகின்றனர்.

Post a Comment

0 Comments