கோவையில் உலகத்தமிழ் மாநாட்டு பணிகள் நிறைவு : வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் வருகை


கோவை :உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முடியும் தறுவாயில் உள்ளன. பல நாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் கோவைக்கு வர உள்ளனர். கோவை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.


கோவையில் வரும் 23லிருந்து 27ம் தேதி வரையிலும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டுக்காக, கடந்த 10 மாதங்களாக கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில், பெரும்பாலான பணிகள், முற்றிலுமாக முடிக்கப்பட்டுள்ளன.செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும், கொடிசியா சாலை மற்றும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலேயே நடக்கின்றன. கொடிசியா சாலையின் இரு புறமும் 100 ஏக்கர் பரப்பிலான இடத்தில், மாநாட்டு பந்தல், கண்காட்சி அரங்கம், இணையதள கண்காட்சி, உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளன.உலகம் முழுவதிலும் இருந்து வரும் பத்திரிகையாளர்கள், செய்திகளை உடனுக்குடன் அனுப்புவதற்கு வசதியாக ஊடக அரங்கும் அதே பகுதியில் 60 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.



முகப்பரங்கம், பொழிவரங்கம், கலந்துரையரங்கம், கலந்தாய்வரங்கம் என பல்வேறு பிரிவுகளாக நடக்கவுள்ள ஆய்வரங்கங்களில் பங்கேற்க 4,500க்கும் அதிகமான தமிழறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், பேராளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.இவர்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் 1,020 பேர்களில், 800க்கும் மேற்பட்டோர் தங்களது பயணத்திட்டத்தை அனுப்பி விட்டனர்.மாநாட்டுப் பந்தலில் இருக்கைகள் விளக்கு அலங்காரம், இருக்கை ஏற்பாடு போன்ற பணிகள் துரிதகதியில் நடக்கின்றன. கண்காட்சி அரங்கத்தில் காட்சிக்கு வைக்க வேண்டிய பொருட்கள், நாளையிலிருந்து கொண்டு வரப்படுமென்று கண்காட்சி அமைப்புக் குழுவினர் தெரிவித்தனர்.வெளிநாடுகளிலிருந்து மாநாட்டில் பங்கேற்க வரும் தமிழறிஞர்கள், பேராளர்கள் பலரும் இன்று முதல் கோவைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இவர்களை வரவேற்கவும், இவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கான பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.சாலைகள், நடைபாதைகளை சுத்தப்படுத்தும் பணி, இரவு பகலாக நடக்கிறது. மாநாட்டு வளாகத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.இரவில் சீக்கிரமே முடங்கி விடும் கோவை நகரம், கடந்த சில நாட்களாக இரவு முழுவதும் ஆங்காங்கே பணிகள் நடப்பதால் தூங்கா நகரமாக மாறியுள்ளது. எல்லா இடங்களிலும் வர்ணம் பூசும் பணியும், சுத்தப்படுத்தும் பணியும், அலங்கார வேலைகளும் நடப்பதால் நகரமே கோலாகலமாகக் காட்சியளிக்கிறது.



பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மீண்டும் கோவைக்கு வந்து பணிகளை ஆய்வு செய்தார்.மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு வளாகம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டுக்காக எல்லா வகையிலும் உற்சாகத்துடன் தயாராகிக் கொண்டிருக்கிறது கோவை நகரம். முதல்வர் கருணாநிதி, நாளை (21ம் தேதி) காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். காலை 11.30 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், அவர் கோவை செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments