உலகத் தமிழ் மாநாடு ஒப்புதல் பெற முடிவு

சென்னை : உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு உரிய ஒப்புதலைப் பெற, முதல்வர் கருணாநிதி நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவையில், வரும் ஜனவரி 21 முதல் 24ம் தேதி வரை, உலகத் தமிழ் மாநாட்டை தமிழக அரசு நடத்த உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து, தனது சி.ஐ.டி., காலனி வீட்டில் முதல்வர் கருணாநிதி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுதவிர, முன்னாள் துணைவேந்தர்கள் வா.செ.குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன், தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பொருளாளர் முத்துகுமாரசாமி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் இதில் கலந்துகொண்டனர்.

உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது குறித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் நெபுரு கரோசீமாவை தொடர்புகொள்வது பற்றியும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி இதற்காக, நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, அதில் இந்த மாநாட்டிற்கான உரிய ஒப்புதலை பெறுவதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்புதலைக் கோரி, உலகத் தமிழ் ஆராயச்சிக் கழக தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு குறித்து அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழறிஞர்களுக்கு அவ்வப்போது தகவல்களைத் தர, இணையதளம் ஒன்றை பதிவு செய்து துவக்க, நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments