எமதர்மன் விளம்பரம்: ஜெ., விமர்சனம்

சென்னை : "தமிழர்களின் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்த முடியாத கருணாநிதி, அரசு விளம்பரத்தில் தன்னை, "காலம் வீசும் கயிற்றை தடுப்பவர்' போல் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.




இது குறித்து ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈ.வெ.ரா.,வின் பாசறையில் படித்த கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், எமதர்மர் உயிரை பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து, தன் முகமூடியை தானே கிழித்துக் கொண்டு, தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.இந்து சமய கடவுள்களை கொச்சைப்படுத்தியும் நிந்தித்து, தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொள்கிறார் கருணாநிதி.பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக, எமதர்மர் உயிரை பறிப்பது போலவும், அதை கருணாநிதி தடுப்பது போலவும், தமிழக அரசின் சார்பில் தற்போது விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.




இவ்வளவு நாள் இலை மறை காய் மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை, தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது முகமூடியை கருணாநிதி தானே கிழித்துக் கொண்டார்.தமிழர்களின் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்த முடியாத கருணாநிதி, தன்னை "காலம் வீசும் கயிற்றை தடுப்பவர்' போல் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.இவ்வாறு ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments