தமிழ் செம்மொழி மாநாடு: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு, தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.கோவையில், அடுத்த ஆண்டு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும், பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கிணைக்கவும், ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவின் தலைவராக, தலைமைச் செயலர் ஸ்ரீபதி, அமைப்பாளராக மாநாட்டின் தனி அலுவலர் அலாவுதீன் செயல்படுவர். உறுப்பினர்களாக, உள்துறை, நிதித்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளின் முதன்மைச் செயலர்கள், நகராட்சி நிர்வாகம், பொதுத்துறை, அறநிலையத் துறை, சுற்றுலா, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் செயலர்கள், காவல் துறை டி.ஜி.பி., மின் வாரியத் தலைவர், கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறையில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும், இதில் உறுப்பினர்களாக இருப்பர். முதல்வர் தலைமையிலும், துணை முதல்வர் தலைமையிலும் அமையவுள்ள குழுக்களின் முடிவுகள்படி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பல்வேறு துறைகளின் பணிகளையும் ஒருங்கிணைத்து மாநாடு சிறப்பாக நடப்பதற்கான நடவடிக்கைகளை, இக்குழு மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments