அமெரிக்க இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி

ரிச்மாண்ட்: அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத் தலைநகர் ரிச் மாண்டில் கட்டப்பட்டு வரும் புதிய இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ரிச்மாண்டில் உள்ள இந்தியர்கள், இந்திய கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் பராமரிப்பதிலும் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக விர்ஜினியா இந்து மையம் என்றழைக்கப்படும் மண்டபத்தில் நமது கோயில் பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இந்த மண்டபத்தில் கணேசப் பெருமான், வெங்கடேஸ்வரா, சிவன் மற்றும் இதர கடவுளர்களின் விக்ரகங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் முருகனின் படம் அமைக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு முன் சில பக்தர்கள், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளை வழங்கினர்.


அதன் பின் முருகப் பக்தர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். இந்து மையத்தில் கார்த்திகேயப் பெருமானின் பல விழாக்களைப் பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கடந்த 4 ஆண்டுகளாக மாதாந்திர கார்த்திகை பூஜைகள், தைப்பூசம், வள்ளி திருமணம், திருக்கார்த்திகை மற்றும் கந்த சஷ்டி ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டன.


இந்த ஆண்டு ஒரு புதிய பாரம்பரிய கோபுரங்களுடன் கூடிய கோயில் கட்டும் பணி துவங்கி உள்ளது. இந்த பணி 2010ம் ஆண்டு நிறைவு பெறும். புதிய கோயிலில் கார்த்திகேயப் பெருமானுக்கும் ஒரு சன்னதி அமைக்க கோயில் அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இந்த புதிய கோயிலைக் கட்ட பக்தர்கள் தேவையான நிதி உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாரம்பரிய கோயிலைக் கட்டவும் ஒரு கல்வி மையம் உருவாக்கவும் இதர வசதிகளைச் செய்யவும் சுமார் 50 லட்சம் அமெரிக்க டாலர் ( 25 கோடி ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கோயிலைக் கட்டுவதற்கான நிதியைத் திரட்டும் பணியில் கோயில் அறங்காவலர் குழு ஈடுபட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் நிதி பெற்றும், நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சிகளை நடத்தும் முயற்சியிலும் அறங்காவலர் குழு ஈடுபட்டுள்ளது. கோயிலை விரைவில் கட்டி முடிக்கவும் அதில் கார்த்திகேயப் பெருமான் சன்னதி அமைக்கவும் பக்தர்களின் ஒத்துழைப்பை அறங்காவலர் குழு எதிர்பார்க்கிறது. பக்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த பணி சிறப்பாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதியின் மகள் மல்லிகா மூர்த்தி, சேகர் வீரப்பன், சுபா ஸ்ரீதர், அசோக் செட்டி, பி.இலக்குவன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments