விலங்குகளைப் போல இலங்கை தமிழர்கள் : அமெரிக்க டாக்டர் டில்லியில் வேதனை

விலங்குகளை அடைத்து வைத்துள்ளதுபோல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்கு கொட்டடியில் அடைத்துவைத்துள்ளனர். ஒரு மாதத்தில் வரப்போகும், வடகிழக்கு பருவமழையின் கடுமையான பாதிப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய இஸ்லாமிய மைய அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த, டாக்டர் எலின் சந்தர் உரையாற்றுவதாக இருந்தது. இவருக்கு விசா மறுக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவில் இருந்தே நேரடியாக டெலிகான்பரன்சிங் மூலம் அரங்கில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: சுனாமியின்போது இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்பை நேரடியாகக் கண்டேன். அப்படிப்பட்டவர்கள், இன்று உடமைகள் இழந்து தவிக்கின்றனர். முகாம்கள் என்ற பெயரில், முள்வேலிக்குள் அடைத்து வைத்துள்ள அவலம் நடந்துள்ளது. தண்ணீர் வசதி அந்த முகாமில் இல்லை. மூன்றரை லட்சம் பேருக்கு வெறும் ஐநூறு கழிவறைகள்தான் உள்ளன. முகாமைச் சுற்றிலும் மனிதக் கழிவுகள் கிடக்கின்றன. சுகாதாரமற்ற சூழ்நிலையால் சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்களுக்கு பலரும் பலியாகின்றனர். திறந்தவெளி பிரசவங்கள் நடக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் உதவ வந்தும் அதை அரசு தடுக்கின்றது. உணவு,மருந்து தட்டுப்பாடு உள்ளது. வெறும் 50 டாக்டர்கள்தான் உள்ளனர். உறவினர்களை பார்க்க அனுமதியில்லை. விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல இவர்களை ஒரு வனவிலங்கு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில், வடகிழக்கு பருவமழை பெய்யும். முகாம் இருக்கும் வன்னி பகுதி மிகவும் தாழ்வான பகுதி. எனவே மழைநீர் பெரியஅளவில் தேங்கும் வாய்ப்புள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய மீடியாக்களுக்கும் அனுமதியில்லை. வடக்கு பகுதி,முல்லைத்தீவு போன்றவற்றில் கண்ணிவெடியெல்லாம் கிடையாது. போஸ்னியாவில் செர்பியர்கள் தாக்கப்பட்டபோது, சிலமணி நேரங்களில் ஐக்கியநாடுகள் சபை செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றியது. ஆனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, யாருமே கண்டுகொள்ளவில்லை. ஐ.நா., வை செயல்படவிடாமல் ஒருசில நாடுகள் செய்துவிட்டன. இவ் விஷயத்தில், இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு எலின் சந்தர் பேசினார்.

இதே கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ," இந்தியாதான் அனைத்து துயரங்களுக்கும் பொறுப்பு. மத்திய அரசு அளித்த 500 கோடி ரூபாய் மற்றும் உதவிப் பொருட்கள் என்ன ஆனது என்பதே தெரியவில்லை,' என்றார். ம.நடராஜன் மற்றும் பலர் உரையாற்றினர்.

Post a Comment

0 Comments