செம்மொழி மாநாடு அறிவிப்புகள்:
* தமிழகத்தில் ஐந்து இடங்களில் மரபணு பூங்கா நிறுவப்படும். அதற்கு எம்.எஸ்., சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.
* இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிவார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுமேயானால், செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாகஅறிவிக்க வேண்டும், என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என, 2006ம் ஆண்டு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை தாமதிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சமஸ்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவது போன்று, தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
* இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே, இந்திய அரசு அமைக்க உள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
* கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டம் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு திட்டமிட வேண்டும்.
* தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
* தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு "கணியன் பூங்குன்றனார்' விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். முதல்கட்டமாக விழா மேடையில் விருது வழங்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.
* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.
* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.
* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.
* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.
* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.
* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது
* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.
* கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.
* தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
* அறிவியல் தமிழை மேம்படுத்த கம்ப்யூட்டர், மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இவற்றுக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கருணாநிதி பேசினார்.
0 Comments
premkumar.raja@gmail.com