தஞ்சை, மதுரை தமிழ் மாநாடுகளை கோவை மிஞ்சும் : மாவட்ட கலெக்டர் பேட்டி

கோவை : ""மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இதற்கு முன் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளை விட, கோவை மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்படும். இதற்கென, மாவட்ட அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். மாநாடு நடக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணி துவங்கி விட்டது,'' என்று மாவட்ட கலெக்டர் உமாநாத் கூறினார். கோவையில் ஜனவரி 21ம் முதல் 24ம் தேதி வரை உலகத் தமிழ் மாநாடு நடக்கிறது. சென்னையில் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில், மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.



இதில் பங்கேற்ற கோவை கலெக்டர் உமாநாத், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் மாநாட்டை நகரின் எந்த பகுதியில் நடத்துவது என, இதுவரை முடிவு செய்யவில்லை. மாநாடு நடத்தப்படும் இடம், அனைத்து மக்களும் எளிதில் வந்து செல்லும் வகையில் ரோடு, மின்சாரம், தண்ணீர், இணைப்பு சாலைகள் உள்ள இடமாக இருக்க வேண்டும். மாநாடு நடக்கும் நான்கு நாட்களும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இருந்து வரும் தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள், விருந்தினர்கள் தங்கும் வசதி, தங்குமிடத்தில் இருந்து மாநாடு நடக்கும் இடம் வரையிலான தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் நகரின் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகிறோம்.




தேர்வு செய்யப்படும் இடத்தின் அடிப்படையில் நான்கு நாட்கள் நடக்கும் மாநாட்டை ஒரே இடத்தில் வைப்பதா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வைப்பதா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். தற்போது முதல் கட்ட பணிகள் மட்டுமே துவங்கியுள்ளன. பொருத்தமான இடங்கள் பற்றிய ஆய்வு அறிக்கை, விரைவில் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தமிழ் இலக்கிய சங்கங்கள், அறிஞர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தப்படும். மாநாட்டுக்கென மாவட்ட அளவில் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்படும். மாநாட்டுக்கு எந்தெந்த தமிழ் அறிஞர்கள், புலவர்கள், தமிழ் ஆய்வாளர்களை அழைப்பது என்பது பற்றி அக்குழுவினர் முடிவு செய்வர். கலாசாரம், மொழி, செய்தித் தொடர்பு என, மாநாட்டின் ஒவ்வொரு அம்சங்களும் அந்தந்த துறையினரிடம் ஒப்படைக்கப்படும். கல்வி, கலாசாரம், மொழி, ஆய்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அத்துறை சார்ந்த பல்கலைகளிடம் ஒப்படைக்கப்படும்.


முந்தைய மாநாடுகளுக்கு 25 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இம்மாநாட்டுக்கு அதை விட கூடுதல் தொகை ஒதுக்கப்படலாம். தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களை விட கோவையில் சிறந்த வசதிகள் உள்ளன. எனவே, அங்கு நடந்த மாநாடுகளை விட கோவையில் நடக்கும் மாநாடு சிறப்பு பெறும். அனைவராலும் பேசப்படும். இவ்வாறு உமாநாத் கூறினார்.

Post a Comment

0 Comments