இலங்கையில் ஐந்து லட்சம் ஏக்கரில் விவசாயம் : வேளாண் பல்கலை துணைவேந்தர் ஆய்வு

கோவை : ""இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பான ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில், அந்நாட்டுக்கு நவீன வேளாண் கருவிகள், விதை ரகங்கள், உரங்கள், பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி கூறினார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒடுக்கப்பட்ட பின் கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் வசிக்கும் பகுதிகளில் விவசாய தொழிலை மேம்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பயனும் இல்லாமல் காடு பிடித்து கிடக்கும் நிலத்தில் விவசாயத்தை மீண்டும் தழைக்க செய்ய, இந்திய அரசின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய வெளியுறவுத் துறை சார்பில், ஆறு வேளாண் விஞ்ஞானிகள் அடங்கிய குழு சமீபத்தில் இலங்கை சென்று வந்தது. இதில், கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி மற்றும் நான்கு பேர் தமிழர்கள்.

இலங்கை பயணம் பற்றி துணைவேந்தர் முருகேச பூபதி கூறியதாவது: போருக்குப் பின் இலங்கையின் மறு சீரமைப்புக்கு உதவ இந்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அங்கு சில பகுதிகளில் விவசாய தொழில் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜூலை 23ல் டில்லியில் வெளியுறவுத் துறை சார்பில் முதல் கட்ட கூட்டம் நடந்தது. இதில், இலங்கையில் விவசாயம் செய்ய தேவையானவை பற்றி நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் துணை டைரக்டர் ஜெனரல் திவாரி, கர்நாடகா வேளாண் பல்கலை துணைவேந்தர் செங்கப்பா, தமிழ்நாடு வேளாண் பல்கலை மூத்த பேராசிரியர் பர்வத்தமா உள்ளிட்ட ஆறு பேர் செப்., 16ல் இலங்கை சென்றோம். இவர்களில் நான்கு பேர் தமிழர்கள்.

அங்கு இலங்கை தூதரக அதிகாரி, தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளுடன் நடந்த பல்வேறு கூட்டங்களில், இந்தியாவில் இருந்து வேளாண் விதை, உரங்கள், நவீன தொழில் நுட்ப கருவிகள் தங்களுக்கு தேவை என்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ள தமிழர்களுக்கு விவசாய தொழில் செய்ய உதவுவதுதான் நோக்கம். இதற்கென 600 கோடி ரூபாய் திட்டத்தை இலங்கை அரசு வகுத்துள்ளது. தற்போது நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடக்கிறது. இந்தியா மற்றும் டென்மார்க் நாட்டு சிறப்பு குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி மாதம் இப்பணிகள் முடிந்த பின் அந்த நிலங்களில் விவசாயம் பயிரிட முடியும்.


இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உடன்பிறந்த சகோதரர் பேசில் ராஜபக்ஷே தற்போது அந்நாட்டு ஆலோசகர் ஆக உள்ளார். அவர், இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியாவையே நம்பியிருப்பதாக தெரிவித்த அவர், விவசாயம் செய்ய தேவையான தொழில் நுட்பம், பயோ டெக்னாலஜி, மண் ஆய்வுக்கான மொபைல் லேப், புதிய பயிர் ரகங்களை அளித்து உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இலங்கையில், விவசாயம் பயிரிட "மகா' மற்றும் "எல்லா'(சம்பா, குறுவை) ஆகிய இரு சீசன்கள் உள்ளன. அங்குள்ள காலநிலைக்கு பயிர்கள் நூறு சதவீதம் நன்கு விளைய சம்பா சீசன்தான் உகந்தது. அங்கு 42 சதவீத குறுவை பயிர்கள் மழையை நம்பியுள்ளன. தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பகுதியில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில், 60 ஆயிரம் ஏக்கர் நிலம் கடந்த 20 ஆண்டுகளாக காடு பிடித்து பாழ்பட்டு கிடக்கிறது. அவற்றை அகற்றி சுத்தம் செய்த பின்னரே நிலத்தை விவசாயத்துக்கு தயார் செய்ய முடியும். நெல், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் நிறைய விளைகின்றன. புதிய ரக கத்தரிக்காய் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்தியாவை விட இலங்கையில் அதிக மழை பெய்கிறது. அங்கு மக்கள் தொகை இரண்டு கோடிதான். இதனால், தனி நபர் வருமானம் அதிகம். விவசாயம் செய்தால் அவர்களின் வருமானம் மேலும் பெருகும். இலங்கையில் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் தழைக்க தேவையான விஷயங்கள் பற்றிய ஆய்வு அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கவுள்ளோம். அதன் அடிப்படையில் அங்குள்ள விவசாயிகளுக்கும், வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கும் இந்தியாவிலோ, இலங்கையிலோ இந்தியா பயிற்சி அளிப்பது பற்றி இந்திய அரசு முடிவு செய்யும்.இவ்வாறு, துணைவேந்தர் முருகேச பூபதி கூறினார்.

"கனத்த இதயத்துடன் திரும்பினேன்' : துணைவேந்தர் முருகேசபூபதியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் பல்கலை முன் நேற்று மாலை சில அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி, பல்கலை முன் காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துணைவேந்தர் முருகேச பூபதியிடம் கேட்டதற்கு, ""தமிழினத்துக்கு எங்கள் பயணம் துரோகம் செய்யவில்லை. அங்கு விவசாயம் செழித்தால் முகாம்களில் அடைப்பட்டு கிடக்கும் தமிழர்களுக்கு புனர் வாழ்வு கிடைக்கும். இங்கிருந்து அனுப்பும் உதவிகள் அவர்களை சரியாக சென்றடைய இது போன்ற திட்டங்கள் உதவும். வட இலங்கையில் விவசாயத்தை தழைக்க செய்து அங்குள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதே மத்திய,மாநில அரசுகளின் நோக்கம்.""இந்தியா ஒதுக்கியுள்ள 500 கோடி ரூபாயின் ஒரு பகுதியை, விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள், விதைகள், உரங்கள் என, பொருட்களாக கொடுத்தால் தமிழர்களின் வாழ்வுக்கு அது நேரடி பயன் தரும். தமிழர்களின் தற்போதைய பரிதாப நிலையை கேட்டறிந்து, தமிழன் என்ற நிலையில் அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்பினேன்,'' என்றார்.

Post a Comment

0 Comments