காங்கிரசுக்கு தாவுகிறார் திருநாவுக்கரசர்? வரவேற்போம் என்கிறார் தங்கபாலு

மதுரை:கேரளாவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. உள்நாட்டு தேவைக்காக சில பூர்வாங்கப் பணிகளை ஆய்வு செய்யும்போது மத்திய அரசு தலையிடாது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.இளைஞர் காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான 15 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

இதில், தங்கபாலு கலந்து கொண்டார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை' என, ராகுல் தன் சொந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் நீர் பங்கீடு தொடர்பாக முதல்வர்களிடம் பேச்சு நடத்தியும் பயனில்லை. கோர்ட்டில் வழக்குகள் நடக்கின்றன. இதற்கான மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறோம்.கேரளாவில் புதிய அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. உள்நாட்டு தேவைக்காக சில பூர்வாங்கப் பணிகளை ஆய்வு செய்யும்போது மத்திய அரசு தலையிடாது.




"இலங்கையில் தமிழர்கள் தங்களின் சொந்த இடத்தில் மூன்று மாதத்திற்குள் குடியமர்த்தப்படுவர்' என, ராஜபக்ஷே உறுதியளித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக 5,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக காங்., மற்றும் தி.மு.க., எம்.பி.,க்கள் டில்லியில் பிரதமரை நாளை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் சமூக பாதுகாப்பு குறித்து பேசவுள்ளோம்.

பா.ஜ., தேசிய செயலர் திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்போம். நடிகர் விஜய் உட்பட யாரையும் ஒதுக்கவில்லை. 35 வயதுக்கு உட்பட்ட இளம் நடிகைகள், நடிகர்களை காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. சிக்கன நடவடிக்கையாக காங்., எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தங்களின் சம்பளத்தில் 20 சதவீதம் வழங்கவுள்ளனர். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

தமிழக சட்டசபை காங்., தலைவர் சுதர்சனம் கூறும்போது, ""பெரியாறு அணை உயரத்தை 130 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதை கேரள அரசு மதிக்கவில்லை. இதைக்கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம்,'' என்றார்.

Post a Comment

0 Comments