புதிய அணையை தடுக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை : பிரேமச்சந்திரன்

கூடலூர் : ""மக்களின் பாதுகாப்புக்காக கேரள வனப்பகுதியில் புதிய அணை கட்டுவதைத் தடுக்க, தமிழக அரசுக்கு உரிமை இல்லை,'' என, கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். அதே நேரத்தில் "பெரியாறு அணை பிரச்னை குறித்து, சம்பந்தமில்லாத அதிகாரிகளிடமோ, வெளிநபர்களிடமோ பேசக்கூடாது' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது குறித்து, திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் கேரள வனப்பகுதி. அப்பகுதியில் மக்களின் பாதுகாப்புக்காக புதிய அணை கட்டுவது, கேரள அரசின் தனிப்பட்ட நடவடிக்கை. இதைத் தடுக்க தமிழக அரசுக்கோ, தமிழக மக்களுக்கோ எவ்வித உரிமையும் இல்லை. தமிழகத்திற்கு தேவை தண்ணீர்; இதை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை' என்றார்.

அணை பிரச்னையில் "மூச்' : அதிகாரிகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு: "பெரியாறு அணை பிரச்னை குறித்து, சம்பந்தமில்லாத அதிகாரிகளிடமோ, வெளிநபர்களிடமோ பேசக்கூடாது' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பெரியாறு அணைப் பிரச்னை, தற்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. "விரைவில் வெளிவர உள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, நமக்கு சாதகமாகத்தான் இருக்கும்' என, தமிழக அரசு கூறி வருகிறது. அதே வேளையில், "புதிய அணை கட்டுவதற்கான சர்வே பணிக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. புதிய அணை எப்படியும் கட்டி விடுவோம்' என, கேரள அரசு மார்தட்டி வருகிறது. இந்நிலையில், அணைப்பகுதியில் பணியில் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், "பெரியாறு அணைப்பிரச்னை குறித்து, சம்பந்தமில்லாத அதிகாரிகளிடமோ, வெளிநபர்களிடமோ பேசக்கூடாது' என்ற புதிய கட்டுப்பாட்டை, தமிழக அரசு விதித்துள்ளது.

Post a Comment

0 Comments