தமிழக எம்.பி.,க்கள் குழு கொழும்பு பயணம்


சென்னை : இலங்கையில், தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை பார்வையிடுவதற்காக, தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் 10 பேர் கொண்ட குழு, நேற்று சென்னையில் இருந்து கொழும்பு புறப் பட்டது. விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள ஏராளமான தமிழர்கள் அங்குள்ள முகாம்களில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்கியுள்ள தமிழர்களின் நிலை மிக மோசமாக இருப்பதாக பல்வேறு அமைப்புகள் புகார் கூறியுள்ளன. இந்நிலையில், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து அறிய ஒரு எம்.பி.,க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.




இதைத் தொடர்ந்து, தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் கொண்ட 10 பேர் குழுவை, இலங்கைக்கு அனுப்ப முடிவாகியது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையில், கனிமொழி, இளங்கோவன், விஜயன், ஹெலன் டேவிட்சன், திருமாவளவன், சுதர்சன நாச்சியப்பன், அழகிரி, சித்தன், ஜே.எம்.ஆரூண் ஆகியோர் கொண்ட குழு, நேற்று இலங்கைத் தலைநகரான கொழும்பு புறப்பட்டது. நேற்று மதியம் 12.40 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்ட இந்தியன் ஏர் - லைன்ஸ் விமானம் மூலம், எம்.பி.,க்கள் இலங்கை புறப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை முதல்வரின் துணைவியார் ராஜாத்தி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட பலர் வழியனுப்பினர்.




எம்.பி.,க்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கையில், "முதல்வர் கருணாநிதியின் முயற்சியின் பேரில் மத்திய அரசு இலங்கைக்கு இந்த எம்.பி.,க்கள் குழுவை அனுப்புகிறது. இலங்கையில் மொத்தம் 16 முகாம்களில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவற்றை பார்வையிட்டு, தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொண்டு, பின் அது குறித்த அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் தாக் கல் செய்ய உள்ளோம்' என்றார்.




இலங்கை செல்லும் குழுவில் இடம் பெற்றுள்ள கனிமொழி எம்.பி., கூறுகையில், "இலங்கையில் இருக்கப் போகின்ற ஐந்து நாட்களில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் நிலையை பார்வையிட்டு, அது குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிப்போம்,' என்றார். நேற்று இலங்கை புறப் பட்டுள்ள தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழுவினர், தொடர்ந்து ஐந்து தினங்கள் இலங்கையில் தங்கி முகாம்களை பார்வையிடுவர் என்றும், வரும் 14ம் தேதி அவர்கள் சென்னை திரும்புவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments