பிரதமர் மன்மோகன்சிங் பிரசாரத்திற்கு எதிர்ப்பு ; சீனா முரண்டுக்கு இந்தியா கண்டனம்


பீஜிங்: அருணாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஈடுபட்டது குறித்து, சீனா தன் எதிர்ப்பைக் காட்டி முரண்டு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது .நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை குறித்து பார்லிமென்ட்டில் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதைப் பலமுறை வலியுறுத்திப் பேசியுள்ளனர்.அருணாச்சலைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சீனா, அங்கு உள்கட்டமைப்பு வசதிகளான சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.




ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவிடம் அருணாச்சல் வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்க இருந்த கடன்களை சீனா தடுத்து நிறுத்திவிட்டது. திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா அருணாச்சலுக்கு வரக் கூடாது என்றும் எச்சரிக்கை விட்டது. இப்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரதமர் மன்மோகன் சிங் அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 3ம் தேதி மேற்கொண்ட சட்டசபைத் தேர்தல் பிரசாரம் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.




சீனாவுக்கு கவலை : சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மா ஜாவோஜூ இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இந்தியப் பிரதமர் வருகை தந்தது குறித்து சீனா தனது அதிருப்தியைக் கடுமையாகத் தெரிவித்துக் கொள்கிறது. இருதரப்பு உறவுகள் சிக்கலில்லாமல் இருக்கும் நேரத்தில், பிரதமரின் இந்த வருகை சீனாவுக்கு கவலை அளிக்கிறது. இருநாடுகளும் தங்கள் எல்லைப் பிரச்னையில் இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை. இருப்பினும், சீன -இந்திய கிழக்கு எல்லை குறித்து சீனா தன்னுடைய கருத்தில் தெளிவாகவே இருக்கிறது.




இவ்வாறு மா தெரிவித்துள்ளார்.




முன்பு பிரதமர் மன்மோகன், ஜன., 31ம் தேதியும், பின்பு பிப்., 1ம் தேதியும் அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார், அதுவும் சீன விஜயத்தை முடித்து அவர் திரும்பிய பின் மேற்கொண்ட விஜயமாகும். அங்கே அவர் பேசும் போது, "சூரியன் உதிக்கும் பகுதியைக் கொண்ட எங்கள் நாடு' என்று பேசியிருந்தார். ஆனால், அதை சீனா ஏற்கவில்லை. எதிர்த்தது. அதற்கு பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப், "அருணாச்சல் இந்தியாவில் இறையாண்மைக்குள் ஒருங்கிணைந்த பகுதி' என்று பதிலளித்தார். தற்போது, சீனா மீண்டும் தன் பழைய கருத்தை வலியுறுத்திப் பேச ஆரம்பித்திருக்கிறது.




இந்நிலையில், ரஷ்ய பிரதமர் புடினும் சீன பிரதமர் வென் ஜியாபோவும் பீஜிங்கில் சந்தித்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்துள்ளனர். ஆசிய நாடுகளின் தலைமையைக் கைப்பற்ற சீனா மேற்கொண்டிருக்கும் முயற்சியாக ரஷ்ய - சீன நெருக்கம் கருதப்படுகிறது.




இந்தியா கண்டனம்: சீனாவின் அதிருப்திக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன அம்பாசிட்டரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் அழைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் வெளியுறவு துறை அமைச்சர் எஸ். எம்., கிருஷ்ணா அருணாசல பிரதேசம் பற்றி சீனா பேசக்கூடாது இது இந்தியாவின் அங்கம் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments