தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணி தொடங்கியது

சென்னை : இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணி நேற்று துவங்கியது. இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையினை நேரில் கண்டறிய முதல்வர் கருணாநிதி கோரிக்கையினை ஏற்று, எம்.பி.,க்கள் குழுவினர் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தனர்.

அவர்கள் இலங்கைத் தமிழர்களின் நிலையை இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் விளக்கினர். அதற்கு அவர், "இப்பிரச்னைக்கு உரிய முறையில் விரைவில் தீர்வு காணப்படும்' என தெரிவித்திருந்தார். இலங்கை சுற்றுப் பயணம் செய்த எம்.பி.,க்கள் குழுவினர், தமிழக முதல்வரிடம் நேற்று முன்தினம் (14ம் தேதி) அறிக்கை அளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், "முதல் கட்டமாக 58 ஆயிரம் பேர் 15 நாட்களுக்குள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்' என, இலங்கை அரசு உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முதல் இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.


இதுகுறித்து தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் முகாம்களில் இருந்த தமிழர்களில் 2 ஆயிரத்து 400 பேர், தங்களின் சொந்த இடங்களில் குடியேறுவதற்காக பஸ்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது உடனடித் தேவைகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் பணத்துடன், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments