கேரள அரசின் நடவடிக்கைக்கு கருணாநிதி கண்டனம் : இந்தியாவையே ஆட்சி செய்யும் மாநிலமா என கேள்வி


சென்னை : ""முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதை துச்சமாக மதித்து கேரள அரசு செயல்படுகிறது. சட்டத்தை துச்சமாக மதித்து செயல்படும் கேரள அரசு, இந்தியாவையே ஆட்சி செய்யும் மாநிலமா?'' என முதல்வர் கருணாநிதி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், அங்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை கேரள அரசு துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து, முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, கோர்ட் உத்தரவுக்கு எதிராக ஒரு புதிய சட்டத் திருத்தத்தை கேரள அரசு நிறைவேற்றிக் கொண்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, விசாரணையில் உள்ளதை மறைத்துவிட்டு, புதிய அணைக்கு ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மூலம் கேரள அரசு பெற்றுள்ளது. இதைக் கடுமையாக எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதையும் கேரள அரசு துச்சமாக மதித்து, அம்மாநில முதல்வர் அச்சுதானந்தனே, "தமிழகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் எதிர்ப்பு, பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் பெற செய்யப்படும் முயற்சி' என கருத்து வெளியிட்டிருக்கிறார்.




கேரளத்தின் சார்பில் மத்திய அமைச்சராக இருக்கும் தாமஸ், "இந்த சர்ச்சை, இரு மாநிலங்களின் நல்லுறவை பாதிக்கக் கூடியது. இரு மாநிலங்களும், ஒன்றையொன்று சார்ந்து இருக்கும்போது, இதுபோன்ற தேவையற்ற மோதல்கள் கூடாது' என அறிவுறுத்தி உள்ளார். மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படாமல் கவனமாக இருக்கும் நிலை தான், தமிழகம் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலை என்பதை, கடந்தகால நிகழ்வுகள் மூலம், ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் உணர்ந்து கொண்டிருப்பர். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளில், நீதிக்குத் தலை வணங்கும் நிலையைத் தான் தமிழக அரசு பின்பற்றி வருகிறது. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கேரள அரசு, தானே கோர்ட் என பாவித்துக் கொண்டு சட்டம் இயற்றுவதும், புதிய அணைக்கான ஆய்வை மேற்கொள்வதும், வரம்பையும் மீறி செயல்படுவதும் சட்ட ஆட்சி முறைக்கு சரி தானா என்பதை சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


தாங்கள் எண்ணுவதை, வழிமுறைகளை மீறி, சட்டத்தை மிதித்துக் கொண்டு நிறைவேற்றவே முற்படுவோம் என மார்தட்டுவதும், அதை தமிழக அரசு தலைவணங்கி ஏற்றுக் கொள்வதும் தான் கேரள அரசின் நடைமுறை சித்தாந்தம் என்பதை இத்தகைய செயல்களின் மூலம் காட்டினால், இப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற மாநிலம் எது என்ற சந்தேகத்துக்குள் மக்கள் ஆட்பட நேரிடும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments