தமிழர்களுக்கு போலீஸ் அதிகாரம் கிடையாது : ராஜபக்ஷே கூறியதாக சுதர்சன நாச்சியப்பன் தகவல்


""அனைத்து தரப்பினரும் ஒத்துக் கொண்டால் மட்டுமே, வடக்கு கிழக்கு பகுதிகளை இணைக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் போலீஸ் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது'' என்று, ராஜபக்ஷே தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.




இலங்கை சென்று வந்த எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெற்று இருந்த காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது: ராஜிவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டில் தமிழர்களுக்கு போலீஸ் அதிகாரம் தருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ராஜபக்ஷேயுடன் இதுகுறித்து பேசும்போது, எந்த சூழ்நிலையிலும் போலீஸ் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளை இணைப்பது குறித்து கேட்டதற்கு, அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். "இதுபோன்ற பிரச்னைகள் அனைத்தையும் எங்களிடம் விட்டுவிடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்த ராஜபக்ஷே, இதற்கென ஒரு குழு அமைத்து மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது' என்று கூறினார். அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை ஏற்று அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.




முகாம்களைப்பொறுத்த வரை மூன்று வகைகளாக பிரிக்கலாம். வீடு,நிலம் உள்பட சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஒருவகை. வடக்கு பகுதியில் சொந்தபந்தங்களை விட்டு பிரிந்து வாடுபவர்கள் இன்னொரு வகை. எந்த உறவுகளும் இன்றி தவிக்கும் அனாதைகளாக மற்றொரு வகை. இதில் முதல் வகையான சொத்து வைத்திருக்கும் தமிழர்களைத்தான் அரசு அதிகம் சோதனை செய்கிறது. மொத்தம் மூன்று வகையான சோதனை நடைபெறுகிறது. வருவாய் அதிகாரிகள் மூலம் சோதனை, போலீஸ் அதிகாரிகள் மூலம் சோதனை, ராணுவ அதிகாரிகள் மூலம் சோதனை என மூன்று அடுக்காக சோதனை செய்யப்படுகின்றனர்.இந்த மூன்று சோதனை முடிந்த பிறகு இவர்களில் பெரும்பானவர்களை அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். வடக்குபகுதியில் சொந்த பந்தங்கள் உள்ளவர்களையும், அனாதைகளாக இருப்பவர்களையும்தான் முகாம்களில் அதிகம் காணமுடிகிறது. அநாதையாக இருப்பவர்களை ஆதரவளித்து கூட்டிச் செல்ல தொண்டு நிறுவனங்கள் உள்பட யாரும் தயாராக இல்லை. முகாம்களை சீரமைக்க இந்தியா,சீனா,பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் உதவி வருகின்றன. காரணம், பிரிட்டன் போன்ற நாடுகள் வர்த்தக பரிவர்த்தனைகள் பலவற்றை நிறுத்தி கொண்டு விட்டன. இதனால் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை அரசுக்கு, பெரும் அளவு இந்தியாதான் உதவி வருகிறது.




தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து கடற்படை அதிகாரிகளுடன் பேசினேன். கொழும்பு மீனவர்கள் டியூனா என்ற வகை மீன்களைத்தான் பெருமளவு பிடிக்கிறார்கள். தமிழக மீனவர்கள் பிரான் வகை மீன்களை பெருமளவு பிடிக்கின்றனர். எனவே இருநாட்டு மீனவர்களும் ஒருவித இணக்கத்துடன் மீன்பிடி தொழில் செய்ய ஏற்ற வகையில் இரு நாட்டு மீனவ தலைவர்களை அழைத்துப் பேச வேண்டுமென கேட்டுக் கொண்டேன். இதை பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் படகு சவாரி விட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன். தூத்துக்குடியை குறிப்பிட்டுத்தான் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். தூத்துக்குடி என்பது சரக்கு துறைமுகமாகத்தான் கருத வேண்டும். எனவே ராமேஸ்வரம்தான் சரியாக வரும் என்று கூறியதை அடுத்து அதையும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டனர்.




பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் கச்சத்தீவு பகுதியில் இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தினேன். இதுகுறித்து உரிய முறையில் கவனம் செலுத்துவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

Post a Comment

0 Comments