இலங்கையின் முக்கிய சாலையான 'ஏ-9' திறப்பு : இலங்கை அரசு முடிவு

""ஏ-9 சாலை வழியாக யாழ்ப்பாணம் சென்று வருவதற்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் அனுமதி தேவையில்லை,'' என, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானயக்கார அறிவித்துள்ளார்.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் வரை 321 கி.மீ., நீளம் கொண்டது ஏ-9 சாலை. இலங்கையின் ரத்த நாளம் போன்ற இச்சாலையில், யாழ்ப்பாணத்தை ஒட்டி வரும் 200 கி.மீ., தூரம் பயணிப்பதற்கு, இலங்கை அரசுடைய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் அனுமதி தேவையாக இருந்தது.புலிகளின் அச்சுறுத்தலால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதனால், தமிழ் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். போக்குவரத்துக்காக விமானத்தையும், கப்பலையும் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. தற்போது விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந் துள்ளதால், தரைவழிப் போக்குவரத்தில் கெடுபிடி தளர்த்தப் பட்டுள்ளது.

இது தொடர்பாக, உதய நானயக்கார கூறியதாவது: புலித் தலைவர் பிரபாகரனின் மரணத்துக்குப் பிறகு, ஏ-9 சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பது தொடர்பாக, இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷேவை, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீ, கொழும்பில் சந்தித்து வலியுறுத்தினார். வவுனியா வரை வரும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதை ஏற்ற அரசு, உடனடியாக அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இனி, இலங்கை பிரஜைகள் யார் வேண்டுமானாலும், ஏ-9 சாலை வழியாக, இலங்கை போக்குவரத்துக் கழக பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் மூலம் சென்று வரலாம். இதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் அனுமதி பெறத் தேவை இல்லை. அதற்கு மாற்றாக, தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் காட்டினால் போதும். அவ்வழியாகச் செல் பவர்கள் அனைவரும், வவுனியா சோதனைச் சாவடியில் சாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

யாழ் பகுதியில் இருந்து பொருட்களை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும், கொண்டு வரவும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்காக பயன்படுத் தப்படும் லாரிகள் மற்றும் வாகனங்கள், அத்தியாவசிய சேவைகள் ஆணையரிடம் பதிவு செய்ய வேண்டும். வரும் 20ம் தேதி (இன்று) வரை இந்தப் பதிவுகளைச் செய்துகொள்ள முடியும். இவ்வாறு நானயக்கார கூறினார்.

Post a Comment

0 Comments