முல்லை பெரியாறு அணை பிரச்னை : கேரள அரசின் புதிய மனு தள்ளுபடி

புதுடில்லி : முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு புதிதாக தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் நேற்று தள்ளுபடி செய்தனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட் டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரள அரசு, முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றை கட்ட முற்பட்டுள்ளது. புதிய அணை கட்டுவது தான் பாதுகாப்பானது என்றும் கூறி வருகிறது.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிய மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "தற்போதைய நிலையில் முல்லைப் பெரியாறு அணை செயல்பட அனுமதித்தால், சுற்று வட்டாரப் பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது' என, ரூர்கி ஐ.ஐ.டி.,யின் நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்களின் அறிக்கையை நாங்கள் சமர்ப்பித் துள்ளோம். அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும்; பதிவு செய்து கொள்ள வேண்டும். அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயின், முகுந்தம் சர்மா மற்றும் லோதா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச், "முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில், வாதங்கள் நடைபெற்று அவை முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில், புதிதாக ஒரு மனுவை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால், அது பிரச்னையை மேலும் அதிகரிக்கும். அதனால், கேரள அரசு புதிதாக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என தெரிவித்தது.

Post a Comment

0 Comments