இஷ்டம் போல் சட்டம் : கடுப்பேற்றும் சீன அதிகாரிகள்


ஹுவாங்பிங் (சீனா) : கெடுபிடிக்குப் பேர்போன சீனாவில், அரைவேக்காட்டு அரசு அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல் சட்டங்களை இயற்றி ஊழியர்களைப் பாடாய்ப் படுத்துகின்றனர். சீனாவில், அரசின் அனுமதியின்றி ஒரு சட்டம் நடைமுறைக்கு வருவது என்பது அரிது. அப்படியிருந்தும், சில சீன அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, இஷ்டத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பது உண்டு. இந்த ஏடாகூட அதிகாரிகளை அரசாய்ப் பார்த்து வெளியே தள்ளினால்தான் உண்டு. இல்லையெனில் ஊழியர்களின் நிலை பரிதாபம்தான். அங்குள்ள பத்திரிகைகளோ, யார் இதுபோன்று மொக்கை உத்தரவுகளைப் பிறப்பிப்பது என்று கண்டுபிடித்து எழுதுவதும் கிடையாது.


பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், சாலையில் நின்று கொண்டு, போகும் வரும் கார்களுக்கு "சல்யூட்' அடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. "இதனால் போக்குவரத்தில் விபத்து குறையும் என்றும், குழந்தைகள் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடப்பர் என்றும் காரணம் சொல்லப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கும் பிச்சை எடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று சூடான விமர்சனம் வந்த பிறகு உத்தரவு வாபசானது. ஹூபே மாநிலத்தில், அரசு கம்பெனிகளால் தயாரிக்கப்படும் சிகரெட்டுகளை தான் அரசு ஊழியர்கள் வாங்க வேண்டும்; அதுவும், ஆண்டுக்கு சில ஆயிரம் வரை வாங்கியிருக்க வேண்டும்; இல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என்று "லூசுத்தனமான' உத்தரவு போடப்பட்டது. இதற்கும் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு சில மாதங்களில் இந்த உத்தரவும் வாபஸ்.




இதே போலத்தான், ஒரு குறிப்பிட்ட பிராண்டு மதுபாட்டில்களையும் வாங்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டனர் அதிகாரிகள். இதன்படி ஒரு நாளைக்கு ஒரு ஊழியர் மூன்று பாட்டில்கள் வாங்க வேண்டும். இதுவும் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. குயிஜோவு மாநில ஊழியர்கள், அங்குள்ள பாரம்பரிய பழைய கிராமம் ஒன்றுக்கு இரண்டு மாதங்களில் ஐயாயிரம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டனர். தெருவில் வந்தவன் போனவனையெல்லாம் கார், பஸ், ஸ்கூட்டர்களில் திணித்து அழைத்துச் சென்றனர் ஊழியர்கள். சமயத்தில் அவர்களே சுற்றுலாப் பயணிகளாகவும் மாறினர். ஒரு மாதக் கூத்துக்குப் பின் இதுவும் வாபஸ். சமீபத்தில், ரஷ்யாவை ஒட்டியுள்ள ஹெய்ஹீ நகரில் உள்ள அனைத்து நாய்களையும் கொல்வதற்கு உத்தரவிட்டுள்ளனராம். ஐயோ பாவம்!

Post a Comment

0 Comments