வேளாண் விஞ்ஞானிகளுக்கு கோவை மாநாட்டில் முதல்வர் கருணாநிதி

கோவை: உலக அளவில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டை உயர்த்தவும் விஞ்ஞானிகள் வழிவகை காண வேண்டும் என கோவையில் நடந்த வேளாண் அறிவியல் மாநாட்டில் கருணாநிதி விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். கோவை வேளாண் பல்கலை.,யில் வேளாண் அறிவியல் 4 வது தேசிய மாநாடு நடந்தது. மாநாட்டில் மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் தலைமை வகித்தார். முதல்வர் கருணாநிதி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார் . கோவை பீளமேடு விமான நிலயத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது; தொழில் மயம் , நகர்மயம் காரணமாக விவசாய பரப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் தன்னலம் பாராமல் உழைத்து வருகின்றனர். தமிழகத்தில் பல நன்மைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பொருட்களின் தரத்தை உயர்த்துதல், கூடுதல் விலை பெற்றுத்தருவதன் மூலம் விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த முடியும். இதற்கு வேளாண் அறிவியல் நிபுணர்கள் உதவி வருகின்றனர்.

இயந்திரம் தேவை அதிகரிப்பு : விவசாய தொழில் விவசாயிகளின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. அவர்கள் வாழ்க்கை மேம்பாடு அடைய அனைத்து வழிமுறைகளையும் காண வேண்டும். 1971 ல் கோவை வேளாண் கல்லூரியாக இருந்ததை தரம் உயர்த்தி வேளாண் பல்கலைக்கழகமாக மாற்றினேன். தற்போது வேளாண் உற்பத்தி பெருகி வருகிறது. 1967 ல் உணவு தானிய உற்பத்தி 54 லட்சம் டன்னாக இருந்தது. 1976 ல் 72 லட்சம் டன்னாக உயர்ந்தது. தற்போது ஹெக்டேருக்கு 1450 கிலோவாக இருந்த அரிசி உற்பத்தி 3450 கிலோவாக அதிகரித்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களுக்கு பதிலாக இயந்திரம் வந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இன்று மிஷின் தேவை அதிகரித்துள்ளது., விவசாய வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு 2006 - 2007 ல் ரூ, 652 கோடி மானியமாக தமிழக அரசு வழங்கியுள்ளது.

விவசாய வளர்ச்சிக்கு வழிகள் : கரும்பு, அரிசி, கோதுமை உற்பத்தியில் நம் நாடு உலக அளவில் 2 ம் இடத்திலும் , பயறு வகைகள் உற்பத்தியில் முதலிடத்தையும், ஆயில் வித்து உற்பத்தியில் 3 வது இடத்தையும் , காய்கறி கனி உற்பத்தியில் 2 ம் இடத்தையும் வகித்து வருகிறது. இது போதாது இந்த வளர்ச்சி இன்னும் மேலோங்க வேண்டும். இதற்கு விஞ்ஞானிகள் சிந்தித்து நல்ல வழிவகைகளை காண வேண்டும் .


விவசாயத்தில் உற்பத்தியை பெருக்க , செழிக்க புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் அறிவயல் மையம் மூலம் பயிற்சியளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் விசாயிகளின் வாழ்வு உயரும் . விவசாய தொழில் பெருகும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Post a Comment

0 Comments