ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2012ல் நிறைவு பெறும் : துணை முதல்வர் அறிவிப்பு


தர்மபுரி : ""ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், வரும் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் திட்டமிட்டபடி துவங்கி, 2012ல் முழு பணியும் முடிக்கப்படும்,'' என பெண்ணாகரம் அடுத்த பருவதன அள்ளியில் நடந்த சமத்துவபுரம் திறப்பு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் பருவதனஅள்ளி கிராமத்தில், சமத்துவபுர திறப்பு விழா, சுயஉதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழா, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பல்வேறு அரசு திட்ட உதவி வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், சமத்துவபுரத்தை திறந்து வைத்து பேசியதாவது:கடந்த 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சமத்துவபுரம் திட்டம் அறிவிக்கப்பட்டு, 97ம் ஆண்டு துவங்கப்பட்டது. தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக, அ.தி.மு.க., ஆட்சியில் சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. குடியிருப்புகளையும் பராமரிக்காமல் விட்டாதால், அனைத்தும் பழுதடைந்தன. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பழுதடைந்த சமத்துவபுரம் பராமரிக்க 16 கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கியது.தி.மு.க.,வில் மட்டுமின்றி ஆட்சியிலும் நான் பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளேன்.

தற்போது துணை முதல்வராக உள்ளேன். துணை முதல்வர் பதவி வெறும் அதிகாரத்துக்காக வழங்கப்பட்ட பதவி அல்ல; முதல்வருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இருக்கவே அந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.சுயஉதவிக் குழுக்களை பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனாக 1,646 கோடி ரூபாயும், சுழல் நிதியாக 76 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.தி.மு.க., ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டில் மட்டும் வங்கி கடனாக 4,676 கோடி ரூபாயும், சுழல் நிதியாக 191 கோடி ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.சுய உதவிக் குழுக்களை அரசியல் லாபத்துக்காக உருவாக்கவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது எல்லாம், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

தர்மபுரியை அடுத்த அரூரில் மகளிர் கலைக் கல்லூரி அமைப்பதற்கு ஆய்வு நடக்கிறது. நிச்சயமாக அங்கு கல்லூரி நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் தீராத பிரச்னையாக உள்ளது. இதை போக்கும் வகையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.திட்டம் அறிவிக்கும்போதே, எந்த அடிப்படையில் எந்ததெந்த கட்டங்களில் குடிநீர் திட்டம் துவங்கப்படும் என, தெளிவாக அறிவிக்கப்பட்டன.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்குவதில் எந்த குழப்பமும் இல்லை. திட்டம் துவங்கும் இடம், தலைமையிடத்து சுத்திகரிக்கப்படும் இடம் ஆகியவை பகுதி-1 திட்டப்பணியில் இடம்பெற்று உள்ளது. பகுதி-1க்கான டெண்டர் நவம்பர் 2ம் தேதி நடந்தது. முறைப்படி பணிகள் நடக்கிறது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்குவதில் எந்த குழப்பமும் இல்லை.வரும் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் திட்டமிட்டபடி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் துவங்கப்படும். இப்பணி முழு வீச்சில் நடந்து 2012ம் ஆண்டு முடிக்கப்படும்.வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்துக்கு எப்படி தி.மு.க., ஆட்சியில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் நிறைவேற்றப் பட்டதோ, அதுபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சமத்துவ குடும்பம் : பெண்ணாகரம் அடுத்த பருவதனஅள்ளி சமத்துவபுரம் விழாவில், விழா மேடை மீது பொருத்தப்பட்டு இருந்த சோடியம் விளக்கு திடீரென வெடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோடியம் விளக்கு தான் வெடித்தது என தெரிந்ததும், பரபரப்பு அடங்கி விழா நிகழ்ச்சி தொடர்ந்தது.விழாவில், ஸ்டாலின் சமத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பேசினார். ஸ்டாலின் பேசும்போது, ""என் குடும்பம் மட்டும் சமத்துவ குடும்பம் இல்லை; தர்மபுரி கலெக்டர் அமுதாவும் ஒரு சமத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவரது கணவர் வடமாநிலத்தை சேர்ந்தவர்; இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதனால், அவரும் சமத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்,'' என சுட்டிகாட்டி பாராட்டினார். அரூர் எம்.எல்.ஏ., டில்லிபாபு (மார்க்சிஸ்ட்) பேசும் போது, துணை முதல்வர் ஸ்டாலினை ""சமத்துவ நாயகன், எழுச்சி நாயகன்,'' என புகழ்ந்து பேசினார்.

Post a Comment

0 Comments