சீன பெண்ணுடன் தமிழக இளைஞர் பெரம்பலூரில் கோலாகல திருமணம்


பெரம்பலூர்: தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், சீனாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், பெரம்பலூரில் கோலாகலமாக திருமணம் நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அருகே குலசேகரபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசோமுவின் மகன் ரத்தினவேல் (30). சிங்கப்பூரில், "டெக் மீடியா' என்ற தனியார் நிறுவனத்தில் சேர்மனாக பணியாற்றி வந்தார். சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.

ஐந்து ஆண்டுக்கு முன் இதே நிறுவனத்தில் இயக்குநராக பணியில் சேர்ந்தார் சீன நாட்டை சேர்ந்த ஷெரீன் ஃபாங் (25). அதைத் தொடர்ந்து, "டெக் மீடியா' நிறுவனம் மேலும் பன்மடங்கு வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போட்டது.இதனால், ரத்தினவேலுவுக்கு ஷெரீன் மீது நன் மதிப்பு ஏற்பட்டு பின் அது காதலாக மாறியது. ரத்தினவேலுவின் காதலுக்கு ஷெரின்ஃபாங்கும் பச்சைக்கொடி காட்டினார். ஐந்து ஆண்டாக ரத்தினவேலும், ஷெரீனும் நாடு, மொழி, இனம் கடந்து ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர்.நிறுவன அலுவல் காரணமாக வெளிநாடு செல்லும்போது தனது காதலியையும் ரத்தினவேல் உடன் அழைத்துச் செல்வார்.

ஷெரீன்ஃபாங்குவை ஹிந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு ஷெரீனும் சம்மதித்தார்.தஞ்சை மண்ணின் மைந்தனான ரத்தினவேலுவுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம். தனது சொந்த ஊர் வரும் போதெல்லாம் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்மரிஷி மலை சென்று வருவது வழக்கம். பிரம்மரிஷி மலையில் 210 சித்தர்கள் வாழ்த்த ஷெரீனை கரம் பிடிக்க ரத்தினவேல் முடிவு செய்தார்.

இதன்படி, நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ரத்தினவேல் - ஷெரீன் திருமணம் நடந்தது. மணமகள் ஷெரீன், அரச முறைப்படி பட்டு கம்பள விரிப்பில் தரையில் பாதம் படாமல் பூக்களால் நிரப்பிய தாம்பாளத்தில் கால் வைத்து நடந்து வந்தார். பின், பல்லக்கில் மணமகன் ரத்தினவேலும், மணமகள் ஷெரீனும், "சிவபூதகணநாத வாத்தியங்கள்' முழங்க மணமேடைக்கு வந்தனர்.மணமகன் தலைப்பாகையுடன், பட்டு சரிகை வேஷ்டி மாலையுடன், மணமகள் ஷெரீன் தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்துடன் பட்டு சேலையில் நாணத்துடன் மாங்கல்யத்தை தலை குனிந்து ஏற்றுக் கொண்டார்.

Post a Comment

0 Comments