கேரள அரசு புதிய அணை கட்டும் நாள் தேசிய ஒருமைப்பாடு உடையும் தினம் : வைகோ ஆவேசம்

தேனி: "முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் நாள், தேசிய ஒருமைப்பாடு உடையும் நாளாக இருக்கும்',என வைகோ பேசினார்.முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தேனியில் ம.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. அதில் வைகோ பேசியதாவது:முல்லை பெரியாறு அணை உடையும் அபாயத்தில் உள்ளதாக கேரள அரசு பொய் பிரசாரம் செய்கிறது. முல்லை பெரியாறு அணைப்பகுதியில் 30 முறை பூகம்பம் ஏற்பட்டும் அணை உடையவில்லை. அணையில் இருந்து 375 அடி தூரத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரம் டன் பாறைகளை வெடி வைத்து உடைக்கும் போது பெரியாறு அணை பாதிக்கப்படும். இதன்மூலம், தென் தமிழகம் வறண்டு, இரண்டு லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக மாறும். தி.மு.க.,வை சேர்ந்த ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது தான் கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. அப்போதே அதை ஏன் நிராகரிக்கவில்லை. தற்போது அணைக்கு மத்திய தொழிற்படை பாதுகாப்பு வேண்டும், என முதல்வர் கேட்டுள்ளார். இதை, மத்திய உளவு பிரிவு 2006ம் ஆண்டிலேயே பரிந்துரை செய்துள்ளது. கேரள அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் புதிய அணை கட்டினால் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அனுப்பும் அரிசி,காய்கறி, பருப்பு, கால்நடைகளை நிறுத்தி, பொருளாதார தடை விதிப்போம். கேரள அரசு தமிழர்களின் குரல்வளையை நெரிக்க நினைத்தால், சும்மா இருக்க மாட்டோம்.

தென் தமிழகமே திரண்டு எழும். கேரள அரசு புதிய அணை கட்டும் பணி துவங்கும் நாள் தான், இந்திய தேசிய ஒருமைப்பாடு உடையும் நாளாக இருக்கும். புதிய அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நவ.,14ல் ம.தி.மு.க., சார்பில் மதுரையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா பங்கேற்பார், என்றார்.

Post a Comment

0 Comments