முல்லை பெரியாறை அரசியலாக்க துடிக்கும் அ.தி.மு.க., திட்டம் பலிக்குமா?


சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கும் நூற்றாண்டு கண்ட முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கேரள - தமிழகம் ஆகிய இரு மாநில அரசியலிலும் சூறாவளியைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு எதிராக அணை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அணையை 142 அடிக்கு உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், தமிழக அரசு அதை செயல்படுத்த தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை, பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கடந்த 2004ம் ஆண்டு முதல் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மத்திய அமைச்சர் ராஜா, டி.ஆர்.பாலுவின் கையில் இருந்த போது, அணை விவகாரத்திற்கு அதீத முக்கியத்துவம் தந்து அப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு பெற்றிருக்க முடியும் என்ற குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்புகின்றனர்.புதிய அணை கட்டுவதில் கேரள அரசு காட்டி வரும் அக்கறையை தடுத்து நிறுத்தும் பணியில், தமிழக அரசு மெத்தனமாகவே செயல்படுகிறது என்ற புதிய குற்றச்சாட்டையும் ஜெயலலிதா எழுப்பினார். ஒரிசா மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.டி., மாணவர்களை கேரளாவுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை அம்மாநில அரசு செய்து கொடுத்தது. அணையை உயர்த்தினால், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவினால் ஆபத்து உண்டு என்ற ஆய்வு அறிக்கையை விஞ்ஞானிகள் வழங்கினர்.

ஆனால், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., மாணவர்களை அழைத்துச் சென்று கேரள அரசிற்கு தமிழக அரசு தக்க பதிலடி அறிக்கை கொடுப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவதில் கேரள அரசு அதிகாரிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் உள்ளனர். ஆனால், தமிழக அரசின் அதிகாரிகளுக்கு எள்ளளவும் அக்கறை இல்லை. கடந்த 10 நாட்களாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசின் அமைச்சர்கள், குடிநீர் துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொண்ட குழு டில்லியில் முகாமிட்டபடி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சரியான முறையில் தாக்கல் செய்வதில் மும்முரமாக பணியாற்றினர். ஆனால், தமிழகத்திலிருந்து உயர் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. அமைச்சர் துரைமுருகனிடம் பொதுப்பணித்துறை இருந்த போதும் சரி, தற்போது முதல்வர் கருணாநிதியிடம் இருக்கும் போதும் சரி, முல்லை விவகாரம் தொல்லையாகவே இருக்கிறது.


அணை விவகாரத்தை அரசியல் நடத்துவதற்கான முக்கிய பிரச்னையாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கருதுகிறார். எனவே தான் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை மேல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். மேலும் அ.தி.மு.க., சார்பில் பல்வேறு போராட்டங்களும் மத்திய, மாநில அரசை கண்டித்து நடந்தது.கூட்டணி கட்சியான ம.தி.மு.க., இன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. வரும் 14ம் தேதி மதுரையில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தவுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் உரிமையை நிலை நாட்டுவதில் ஆளுங்கட்சி தவறிவிட்டது என்ற கருத்தும், தென்மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் சங்கம் மத்தியில் நிலவுகிறது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தமிழக அரசுக்கு பாதகமாக வருமானால், தென் மாவட்டங்களில் அரசியல் பிரச்னையாகக் கிளப்பவும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா, 2006ம் ஆண்டு சட்டசபை, 2009ம் ஆண்டு லோக்சபா ஆகிய மூன்று தேர்தல்களிலும் தென் மாவட்டங்களில் ஆளுங்கட்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. கடந்த லோக்சபா தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில், தென்காசி தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் ஆளுங்கட்சி கூட்டணியே வெற்றி பெற்றது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஆளுங்கட்சியின் மெத்தனப் போக்கை சுட்டிக்காட்டி, வரும் சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவும் அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.

மதுரையில் உண்ணாவிரத அறிவிப்பை தி.மு.க., ரத்து செய்தது, தமிழக அரசுக்கு தெரியாமல் புதிய அணை கட்ட ஆய்வு பணி மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் ஆமை வேக நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பொதுக்கூட்டங்கள் மூலம் பிரசாரம் செய்யவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.தென் மாவட்டங்களில் உள்ள மதுரை, விருதுநகர், திண்டுக்கல், நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அ.தி.மு.க., இழந்த செல்வாக்கை, அணை விவகாரம் மூலம் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என அ.தி.மு.க., கணக்கிட்டுள்ளது.தென் மாவட்டங்களில் அணை விவகாரத்தை அரசியலாக்கத் துடிக்கும் அ.தி.மு.க.,வின் திட்டம் பலிக்குமா? என்ற கேள்விக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்னரே தெரியவரும் என்கிறது அரசியல் வட்டாரம்.

Post a Comment

0 Comments