எதிர்ப்பது சீனாவுக்கு வாடிக்கை என்கிறார் தலாய்லாமா:தவாங் விஜயத்தில் மனம் நெகிழ்ந்து உருக்கம்


தவாங் : ""நான் எங்கு சென்றாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது சீனாவின் வாடிக்கை. எனது அருணாச்சல பிரதேச பயணம், அரசியல் ரீதியானது அல்ல,'' என, திபெத் மதத் தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார். மேலும், திபெத்தில் இருந்து முன்பு தவாங் வந்த போது, இந்திய அரசும் அருணாச்சல் மக்களும் தனக்கு அளித்த வரவேற்பு மற்றும் அன்பை நினைவுபடுத்தி பாராட்டினார்.

திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா(74), ஐந்து நாள் பயணமாக நேற்று அருணாச்சல பிரதேசம் சென்றார். அம்மாநிலத்தின் இயற்கை எழில்மிக்க நகரான தவாங்கிற்கு, அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து ஹெலிகாப்டரில் சென்றடைந்த அவரை, முதல்வர் டோர்ஜி காண்டுவும், அவரின் அமைச் சரவை சகாக்களும் வரவேற்றனர்.14வது தலாய் லாமாவான இவர், தவாங்கில் உள்ள 300 ஆண்டு பழமையான புத்த மடாலயத்தில் தங்கி, புத்தமதத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொற் பொழிவாற்றுவார்.பனி சூழ்ந்த மலைகள் நிறைந்த பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் தவாங் நகரம், தலாய்லாமாவை வரவேற்க நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. திபெத்தியர்களால் வாழும் தெய்வமாகக் கருதப்படும் தலாய்லாமாவை வரவேற்க, நகரமெங்கும் அவரின் படங்கள் இடம் பெற்ற வண்ண வண்ண போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்திய - திபெத் கொடிகள் ஆங்காங்கே பறக்க விடப்பட்டிருந்தன. வீடுகள் மற்றும் கட்டடங்கள் வர்ணம்பூசப்பட்டு பளிச்சென தோற் றம் அளித்தன. தெருக்கள் எல்லாம் குப் பைகள் அகற்றப்பட்டு சுத்தமாகக் காணப் பட்டன. சீன, மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய்லாமா விஜயம் செய்வதை, சீனா கடுமையாக எதிர்த்தது. இருந்தாலும், இந்திய அரசு அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், சுதந்திரமாக செல்லலாம் எனக் கூறியுள்ளது.நோபல் பரிசு பெற்றவரான தலாய் லாமா, தவாங் மடத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை சொற்பொழிவாற்றுவார்.

அதன்பின், 12ம் தேதி திராங் நகருக்கும், 13ம் தேதி பொம்டிலாவுக்கும், 14ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகருக்கும் செல்கிறார்.தனது இந்தப் பயணத்தின் போது, சொற்பொழிவாற்றுவதோடு, அருங் காட்சியகத்தை துவக்கி வைப்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.தலாய்லாமாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து தருவதற்காக, சமையல்காரர் ஒருவருக்கு ஒரு மாதகாலமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அவர் வழங்குவதற்காக பரிசுப் பொருட்களும் குவித்து வைக்கப்பட் டுள்ளன. தவாங் புத்த மடத்தில் உள்ள விசேஷ அறையில் அவர் தங்குவார் என, அந்த மடத்தின் தலைவர் துல்கு ரிம்போச்சி கூறியுள்ளார்.

பேட்டி: தவாங் வந்தடைந்த தலாய் லாமா, நிருபர்களிடம் கூறியதாவது:நான் எங்கு சென்றாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை சீன அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. என்னுடைய இந்தப் பயணம் அரசியல் ரீதியானது அல்ல.கடந்த 1962ம் ஆண்டில் இந்திய - சீன போர் நடந்தது. அப்போது, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், தவாங் நகரை ஆக்கிரமித்ததோடு, பொம்டிலா வரை சென்றது. பின்னர் தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவித்த சீன அரசு, தங்களின் படைகளை இந்நகரிலிருந்து வாபஸ் பெற்றது.ஆனால், தற்போது அதே சீன அரசு மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித் துள்ளது. தவாங் மீது உரிமை கொண் டாடுகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.

கடந்த 1959ல் திபெத்திலிருந்து தப்பி தவாங் நகருக்கு வந்தேன். அதை நினைக்கும் போது இப்போதும் ஒரு மனவெழுச்சி ஏற்படுகிறது. திபெத்திலிருந்து தப்பி வந்த போது, மன உளைச்சல் மற்றும் கவலையுடன் இருந்தேன். உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்தேன்.ஆனால், எல்லையில் கிருஷ்ண மேனனையும், இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளையும் பார்த்தவுடன் பாதுகாப்பாக இருப்பது போன்று உணர்ந்தேன். பிரிந்தவர்கள் சேர்ந்தது போன்ற உணர்வுக்கு தள்ளப்பட்டேன்.இதையெல்லாம் நினைத்துப் பார்க் கும் போது, இப்போது இங்கு இருப் பதை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மனிதர்களிடம் நல்ல பண்புகளை வளர்ப்பதே, எனது விஜயத்தின் நோக்கம். சீனாவுக்காக எந்தச் செய்தியையும் சொல்ல நான் விரும்பவில்லை.

திபெத்தில் புத்தமதமும், கலாசாரமும் சிக்கலான காலகட்டத்தைச் சந்தித் துக் கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்ற இப்பகுதி மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.திபெத் அகதிகள் சமூகத்தைச் சேர்ந் தவர்கள் குறிப்பாக இளைஞர்கள், புத்த மடாலயங்களிலும், பல்வேறு திபெத்திய நிறுவனங்களிலும் சேர்ந்து வருகின்றனர். இது நம்பிக்கை தரும் அறிகுறி. திபெத் தொடர்பான தனது நிலையை சீனா தெளிவாக அறிவிக்க வேண்டும். அதுவரை அவர்களுடன் பேச்சு நடத்துவதில் பலன் இல்லை. இவ்வாறு தலாய்லாமா கூறினார்.

Post a Comment

0 Comments