ஒளி பிறக்கட்டும் : இன்று திருக்கார்த்திகை


திருவண்ணாமலையில் ஐந்து தீபம் உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை "இறைவன் ஒருவனே!' என்று தத்துவங்கள் கூறுகின்றன. அந்த ஒருவனுக்கு பெயர் ஏதும் இல்லை. ஊரும் இல்லை. எங்கும் இறைவன் நிறைந்து விளங்குகிறான்.

இதனை வலியுறுத்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் முன்னிலையில் திருக்கார்த்திகையன்று அதிகாலை வேளையில் பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதியை ஏற்றி தீபாராதனை செய்வர். இத்தீபம் " பரணி தீபம்' என்று பெயர்பெறும். கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு முந்தைய பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படுவதால் இந்த தீபத்தை "பரணி தீபம்' என்கிறார்கள். பிறகு அந்த கற்பூரச்சுடரொளி ஒரு பெரிய ஒற்றைத் திரியில் பொருத்தப்பட்டு, நந்தீஸ்வரர் முன்னிலையில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் ஏற்றப்படும். ஒற்றை தீபம் ஒன்றாக இருக்கும் கடவுளையும், ஐந்து தீபங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களையும் அவர் மேற்கொள்ள பஞ்சமூர்த்திகளாகப் பிரிவதையும் காட்டும். இவர்கள் தங்கள் பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும் வகையில் அம்மன் சன்னதியில் ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

கார்த்திகை விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் : ராவணனைக் கொன்ற பாவம் தீர வேதாரண்யம் கடலில் நீராடிய ராமபிரான், சிவபெருமானைப் பூஜித்ததால் இவ்வூர் "ஆதிசேது' எனப்பட்டது. இங்குள்ள சிவனை நான்கு வேதங்களும் வழிபட்டதால் "வேதாரண்யேஸ்வரர்' என்று அழைப்பர். வேதங்கள் சிவனை வணங்கிவிட்டு கோயில் கதவை மூடிவிட்டுக் கிளம்பின. அதன் பிறகு கதவு திறக்கப்படவில்லை. பிற்காலத்தில் அப்பர் கதவைத் திறக்கவும், சம்பந்தர் மூடவும் செய்து அற்புதம் நிகழ்த்தினர். இத்தலத்தில் எலி ஒன்றும் சிவனுக்கு சேவை செய்து சிவபுண்ணியம் தேடிக் கொண்டது. விளக்கில் இருக்கும் நெய்யினை உண்ணப் பாய்ந்து வந்தது எலி. ஆனால், எலியின் மூக்குபட்டு அணைய இருந்த தீபத்தின் சுடர் பிரகாசமானது. அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் நாம் செய்யும் சிவபுண்ணியத்திற்கு பலனுண்டு. ஒன்றும் அறியாத எலி செய்த இந்த அற்புத கைங்கர்யத்துக்காக, இறைவன் மலை நாட்டின் மன்னனாகும் பாக்கியம் தந்தார். மகாபலிச் சக்கரவர்த்தியாய் பிறந்த அந்த எலி மகாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தையும் பெற்றது. அதனால், கார்த்திகை நாளில் ஏற்றும் தீபம் மிகவும் சிறப்பானது என்பதை உணர்வோம்.

ஆண்டுக்கொரு முறை பவனிவரும் அர்த்தநாரி : திருவண்ணமாலையில் திருக்கார்த்திகை அன்று மாலையில் ஏற்றப்படும் தீபம் கார்த்திகை தீபமாகும். தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக அர்த்தநாரீஸ்வரர் ஊர்வலமாக வருவார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இவரது பவனி நடப்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பஞ்சமூர்த்தி சன்னதிகளில் ஏற்றிய ஐந்து தீபங்கள், அம்மன்சன்னதியில் ஏற்றிய ஐந்து தீபங்களும் ஆக பத்து தீபங்களும் சுவாமியின் முன்னால் சுமந்து வரப்படும். கொடிமரத்திற்கு முன்புள்ள அகண்டத்தில் (தீச்சட்டி) இதை ஒன்று சேர்ப்பர். ஒன்றாக இருக்கும் தெய்வத்தால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அந்த தெய்வத்திடமே திரும்பவும் ஒடுங்கும் என்பதைக் குறிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படும்.

அப்போது மலையுச்சியில் கார்த்திகைஜோதியாக அண்ணாமலை தீபம் ஏற்றப்படும். அன்னை உமையவள் அண்ணாமலையில் தவம் செய்ததன் பயனாக சிவனின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதனால் சிவனும் சக்தியும் சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உண்டானது. அத்திருக்கோலம் தோன்றிய நேரமே கார்த்திகை மாத கார்த்திகை தீபம் ஏற்றும் நேரம். தீபமேற்றும் போது பாடும் பாடல்அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் முருகப்பெருமானின் புகழ்பாடும் நூல்களில் சிறப்பானது. திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும் என்பர். இறைவனே தீபச்சுடரொளியாக இருந்து நாம் வேண்டியவற்றை தந்து அருள் செய்கிறான். சாதாரணமாக ஓரிடத்தில் ஏற்றும் விளக்கு புறஇருளைப் போக்கும். ஆனால், திருவிளக்காக கோயிலிலோ அல்லது பூஜை அறையிலோ ஏற்றும் தீபம் நம் புற இருளுடன் மனஇருளையும் போக்கும் சக்தி கொண்டது. அதனால் தான் முருகனைப் போற்றும் அருணகிரிநாதர் பழநித்திருப்புகழில் "தீபமங்கள ஜோதீ நமோநம' என்று தீபச்சுடரை முருகப் பெருமானாகவே போற்றி வணங்குகிறார். அதனால் திருக்கார்த்திகை தீபமேற்றும்போது "
"தீபமங்கள ஜோதீ நமோநமதூய
அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்''
என்று பாடி தீபமேற்ற வேண்டும்.

2500 ஆண்டுகள் பழமையான கார்த்திகை திருவிழா : வட இந்தியாவில் தீபாவளியன்று வீடுகளில் விளக்கேற்றப்படுகிறது. ஆனால், தமிழ் மண்ணில் தீபவிழாவாக கார்த்திகைத் திருநாள் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் பவுர்ணமியன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் கார்த்திகை தீபவிழா நடைபெற்றாலும் நினைக்க முக்தி தரும் தலமாகிய திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக நடக்கிறது. ஞானசம்பந்தர் தேவாரப்பதிகத்தில் ""தொல் கார்த்திகைத் திருநாள்'' என்று இதுபற்றி குறிப்பிடுவதில் இருந்து இதன் பழமையை அறியலாம். அகநானூறு, நற்றிணை போன்ற மிகப்பழைய இலக்கியங்களும் கார்த்திகை விழாவின் சிறப்பைப் போற்றுகின்றன. சம்பந்தர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பிற இலக்கிய காலங்களை பார்க்கும் போது ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக இந்த விழா நடந்து வருவதை அறியலாம்.

கார்த்திகையன்று பிறந்த ஆழ்வார் : பன்னிருஆழ்வார்களில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் ஒளிவிளக்காய் அவதரித்தவர் திருமங்கையாழ்வார். இவர் திருமாலின் கையில் இருக்கும் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாய் தோன்றினார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன். சோழமன்னனிடம் படைத்தலைவராக இருந்து பணி செய்தவர். இவருடைய வீரத்தைப் பாராட்டி மன்னன் ஆலிநாடு என்னும் பகுதியைத் தந்து அரசனாக்கினான். திருமங்கை என்னும் தலைநகரை அமைத்து அதில் அரசாட்சி செய்ததால் "திருமங்கையாழ்வார்' என்று அழைக்கப்பட்டார். பெருமாளுக்கு சேவை செய்யும் பணியைத் துவங்கிய அவர், வழிப்பறி செய்து அடியார்களுக்கு அமுதிட்டார். கல்யாண கோஷ்டியாக மணமகன் கோலத்தில் வந்த பெருமாள் எட்டெழுத்து மந்திரத்தை ஓதி இவரை ஆட்கொண்டார். ஆழ்வார்களில் அதிகமான பாசுரங்களைப் பாடியவர் இவரே. பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு பிரபந்தங்களைப் பாடினார். தமிழில் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நான்குவிதமான கவிதைகளைப் பாடியதால் "நாலுகவிப் பெருமாள்' என்னும் பெயரும் இவருக்கு உண்டு.

முருகனும் கார்த்திகையும் : சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து பிறந்த ஆறுதீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் ஆறுகுழந்தைகளாகத் தவழ்ந்தன. தேவர்கள் அந்த ஆறுகுழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் ஆறுபேரும் சேர்ந்து வளர்க்கும் படி கட்டளையிட்டனர். அப்பெண்கள் ஆறுபேரும் அக்குழந்தைகளுக்குப் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். முருகப்பெருமான் வளர்ந்தபின் அக்குழந்தைகளை உமையவள் ஆறுமுகப்பெருமானாக்கி "கந்தன்'என்று திருநாமம் இட்டாள். இறைவன் சிவபெருமான் கார்த்திகை பெண்கள் முருகனை வளர்த்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு வரம் அருளினார். ""என் பிள்ளை முருகன் உங்களால் வளர்ந்ததால் கார்த்திகேயன் என்று திருநாமத்தோடு விளங்கட்டும். நீங்கள் ஆறுபேரும் நட்சத்திர மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாக சிறப்பிடம் பெற்று விளங்குங்கள். அந்த நட்சத்திர தினத்தில் முருகனை நினைந்து வழிபாடு செய்பவர்கள் எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வார்கள்,'' என்று அருள் செய்தார். இவ்விரதத்தை கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையில் துவங்கி பன்னிரண்டு ஆண்டுகள் மேற்கொண்டால் அனைத்து செல்வமும் கிடைக்கும். நாரதர் இவ்விரதம் மேற்கொண்டு முருகனருள் பெற்றார்.

Post a Comment

0 Comments