மீடியாக்களுக்கு முழு சுதந்திரம் :பொன்சேகா உறுதி


கொழும்பு : "சில அரசியல் சக்திகள், மீடியாக்கள் மீது அடக்குமுறையை ஏவி விட முயற்சிக்கின்றன. நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் மீடியாக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும்'என, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக்ஷேவை எதிர்த்து, எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் மாநாடு தொடர்பாக, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள், சில அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளனர். தற்போது, மீடியாக்கள் மீது அடக்குமுறையை ஏவிட சில அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன. தற்போதைய நிகழ்வுகள் மூலம், மீடியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் யார், எதிராக செயல்படுவோர் யார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இதை கவனத்தில் கொண்டு, பத்திரிகையாளர்கள், நேர்மையான முறையில் செய்தி வெளியிட வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். நான் அதுபோல் செயல்பட மாட்டேன். இதுபோன்ற நடவடிக்கைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நான் ஆட்சிக்கு வந்தால், மீடியாக்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். கடந்த ஒரு ஆண்டாக இலங்கையில் மீடியாக்கள் மீது நடக்கும் தாக்குதல்களை, சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளன. இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.
மீடியாக்கள் மீதான தாக்குதல் குறித்த சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இலங்கை தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுரா யெபா மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில்,"எதிர்க்கட்சியினர் தான், இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்'என்றார்.
இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர் திசநாயாக அந்த கட்சியில் இருந்து நேற்று விலகியுள்ளார். அதிபர் தேர்தல் விவகாரத்தில் ரணிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் அந்த கட்சியில் இருந்து விலகி, ஆளும் கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ராஜபக்ஷேக்கு ஈடு கட்ட தயங்கி, போட்டியிடத் தயங்கும் ரணில் செயல் கட்சியில் பலருக்கு அதிருப்தியைத் தந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments