அதிபர் ராஜபக்ஷே போர்க் குற்றவாளி : கனடா தமிழர்கள் ஆவேசம்


டொரண்டோ : "சரண் அடைந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, போர்க் குற்றவாளியாக கருத வேண்டும். அவர் மீது, சர்வதேச அளவில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என, கனடா வாழ் இலங்கை தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அமைப்பான, கனடா தமிழ் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியுள்ளதாவது: இலங்கையில் போர் துவங்கிய நாளில் இருந்தே, ராணுவத்தால் போர் குற்றங்கள் நடந்து வருவது எங்களுக்கு தெரியும். ஆனால், சர்வதேச சமுதாயம் இதற்கு ஆதாரம் கேட்டது. தற்போது போர்க்குற்றம் நடந்ததாக, இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன் சேகாவே தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட போரின் போது, சரண் அடைந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்ல, ராஜபக்ஷே உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச சமுதாயத்துக்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். எனவே, போர்க்குற்றம் புரிந்ததற்காகவும், மனித உரிமைகளை மீறியதற்காகவும் ராஜபக்ஷே மீது, சர்வதேச சமுதாயம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளி. நெதர்லாந்தில் உள்ள போர்க் குற்றங்களுக்கு எதிரான ஹேக் நீதி மன்றத்தின் முன், ராஜபக்ஷே நிறுத்தப்பட வேண்டும். சரண் அடைந்த எதிரிகளை எந்த நாடும் இதுவரை கொலை செய்தது இல்லை. ஜெனீவா ஒப்பந்தத்தை இலங்கையை போல் வேறு எந்த நாடும் இப்படி மீறி நடந்து கொண்டது இல்லை. செர்பியா தலைவர் ஸ்லோபோடன் மிலோசெவிக் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டதோ, அதேபோன்ற நடவடிக்கை ராஜபக்ஷே மீதும் எடுக்க வேண்டும். ராஜபக்ஷேயின் போர்க் குற்றம் குறித்து, ஐ.நா., சர்வதேச நீதிமன்றம் மற்றும் உலக தலைவர்களுக்கு, தமிழர்கள் சார்பில் கடிதம் எழுதப்படும். கனடா மற்றும் இந்திய தலைவர் களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதப்படும். இவ்வாறு டேவிட் பூபாலபிள்ளை கூறினார்.

இதற்கிடையே, சரண் அடைந்த புலி தலைவர்களை சுட்டுக் கொல்ல ராஜபக்ஷே உத்தரவிட்டதாக, சரத் பொன்சேகா கூறியுள்ள குற்றச் சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறுகையில், "ராணுவ வீரர்கள், நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் விசுவாசமாக இருக்க கூடாது. தனி நபரை விட, நாடு தான் முக்கியம். இதில் எந்த வேறுபாடும் இருக்க கூடாது' என்றார்.

Post a Comment

0 Comments