கிளிநொச்சி உட்பட தமிழர் பகுதிகளில் ஓட்டு வேட்டையாட பொன்சேகா முடிவு


கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகா, முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல், அடுத்த மாதம் நடக்கவுள்ளது. ஆளும் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ராஜபக்ஷேவும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இலங்கை முழுவதும் சுற்றுப் பயணம் மேற் கொண்டு, இருவரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரசார திட்டம் குறித்து சரத் பொன்சேகாவின் மேலாளர் கூறியதாவது:தற்போது முகாம்களில் வசித்து வரும் தமிழர்களில் 15 ஆயிரம் பேர் மட்டுமே, ஓட்டுப் போடுவதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இருந்தாலும், இவர்களின் ஆதரவை பெறுவதற்கு சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் வகையில், அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி, முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் சரத் பொன்சேகா பிரசாரம் செய் வதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வார்.இவ்வாறு மேலாளர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதற்கு, சரத் பொன்சேகாவே முக்கிய காரணம் என, கூறப்படுவதால், தமிழர் பகுதிகளில் இவருக்கு செல்வாக்கு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை சமாளிப்பதற்காகவே, அவர் தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments