பிரபாகரன் மரணம் குறித்த தகவல் : இந்தியாவுக்கு முறைப்படி தெரிவிப்பு


கொழும்பு : விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த தகவலை, இந்திய அரசுக்கு முறைப்படி தெரிவித்தது இலங்கை அரசு. இதன்மூலம் ராஜிவ்காந்தி கொலை வழக்கு முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால், 1991ம் ஆண்டு மே 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனால், பிரபாகரனும், பொட்டு அம்மானும் தேடப்படும் குற்றவாளிகளாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டனர். அவர்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என, இலங்கை அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் நடந்த கடைசி கட்டப் போரில், புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரின் மரணம் குறித்த தகவலை இந்திய அரசுக்கு இலங்கை அரசு நேற்று முறைப்படி தெரிவித்தது.

இதுதொடர்பாக, உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பிரபாகரன் மரணம் குறித்த தகவலை இந்திய அரசுக்கு இலங்கை அரசு முறைப்படி தெரிவித்து விட்டது. பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இந்திய அரசு கேட்டுள்ளது. இந்தக் கோரிக்கை இலங்கை அட்டர்னி ஜெனரலின் பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.

Post a Comment

0 Comments