தமிழர் பிரச்னை எடுபடாததற்கு அரசியல்வாதிகள் தான் காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு


ராமநாதபுரம்:ஈழ பிரச்னையை போல தமிழக மக்களின் பிரச்னை எடுபடாமல் போனதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் தான் காரணம் என புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.ராமநாதபுரத்தில் நடந்த அக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் 15 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். உலக அரங்கிலும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கிறது. இங்கு மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டும், தமிழர்கள் உரிமையை பெற முடியவில்லை.

முல்லை பெரியாறில் கேரளாவும், காவிரியில் கர்நாடகாவும் தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன. ""கச்சத்தீவு முடிந்த கதை'' என வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியிருப்பது அவர் கர்நாடககாரர் என்ற உணர்வில் தான். இருநாட்டு மீனவர்களும் கச்சத்தீவில் மீன்பிடிக்கலாம் என்றாலும், அதை நாம் பெறவேண்டியது அவசியம். ஈழப்பிரச்னை போல, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சர்வதேச தமிழர்கள் குரல் கொடுக்காமல் போனதற்கு இங்குள்ள அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையே காரணம். இவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கும் காலம் விரைவில் வரும். ஆறு கோடி பேர் போராடி பெற முடியாத நிலையில், தமிழகத்தை இரண்டாக பிரித்தால் நம்மால் எதையும் பெறமுடியாது'' என்றார்.

Post a Comment

0 Comments