சென்னையில் கிராமிய உணவுகளின் 'சங்கமம்'!


சென்னை: சென்னையில் நடக்கும் சங்கமம் திருவிழாவையொட்டி, தமிழகம் மற்றும் சுற்றுப் புற மாநிலங்களில் பிரபலமாக உள்ள உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரின் பிரபலமான 8 பூங்காக்களில் இந்த உணவுகள் விற்கப்படுகின்றன.

தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் கிராமிய கலை விழாவான சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கிராமிய உணவுத் திருவிழாவும் நடக்கிறது.

சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள மாநகராட்சிப் பூங்காக்களில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது.

மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, தியாகராயநகர் நடேசன் பூங்கா, போகன் வில்லா அண்ணாநகர், வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா, ஷெனாய்நகர் திரு.வி.க. பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, மெரினா லேடி வெலிங்டன் கல்லூரி ஆகிய இடங்களில் விதவிதமான கிராமிய உணவுகளை சென்னைவாசிகள் சுவைத்து மகிழ்ந்தனர்.

சென்னை லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உணவு திருவிழா நிகழ்ச்சியில் கவிஞர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மீனவ மகளிர் தயாரித்த உணவு வகைகளை வாங்கி ருசித்து சாப்பிட்டார். அமைச்சர் கே.பி.பி.சாமியும் இதில் பங்கேற்றார்.

இதில், கிராமிய உணவுகளும், பாரம்பரிய உணவுகளும் விற்பனை செய்யப்பட்டன.

திருப்பூர், விருதுநகர் உணவு வகைகள், மீன், மட்டன், கோழி வகை உணவுகள், தெல்லிச்சேரி பிரியாணி, பொரிச்ச கோழி, கோழி புட்டு, கேரள சாலையோர உணவுகள், கர்நாடக கொங்கன் கடற்கரை உணவுகள், பம்பாய் பழ ஐஸ்கிரீம், புரோட்டா, கொத்துப் புரோட்டா ஆகியவை சுடச்சுட தயாரித்து தரப்பட்டது. குறைந்த விலை என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிட்டனர்.

வரும் 16-ம் தேதி வரை இந்த உணவுத் திருவிழாவும் நடக்கும்.

Post a Comment

0 Comments