தொழில் வளர்ச்சியில் மூன்றாமிடத்தில் தமிழகம் உள்ளது : துணை முதல்வர் பெருமிதம்


திருவண்ணாமலை : ""தேசிய அளவில், தொழில் வளர்ச்சியில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது'' என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டு ரோடு சிப்காட்டில், "அஷ்லி அல்டிம்ஸ்' இந்தியா நிறுவனத்தின் உயர் அழுத்த அலுமினிய வார்ப்பட தொழிற்சாலையை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: சர்வதேச அளவில் பல தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்துஜா குழுமத்தின் துணை நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனமும், பின்லாந்து நாட்டை சேர்ந்த அல்டிம்ஸ் குரூப்ஸ் நிறுவனமும் கூட்டாக இத்தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.

ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், அசோக் லேலண்ட் நிறுவனம் மூலம் அதிக எண்ணிக்கையிலான பஸ்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதித்துள்ளது. தற்போது, துவங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையின் கட்டுமான மதிப்பீடு 132 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உற்பத்தியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இரண்டாம் கட்டமாக வார்ப்படங்களுக்கான டிசைன் மற்றும் வார்ப்பட அச்சுகள் தயாரிப்பது, மெருகேற்றுவது போன்ற தொழிற்சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் மூன்றாம் இடத்தையும், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. அரசுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில் நிறுவப்படும் தொழிற்சாலைகளில் 75 சதம் பணியிடங்களுக்கு குறையாமல் உள்ளூர் மற்றும் நமது மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

பின்லாந்து நாட்டின் தகவல் தொலை தொடர்பு துறை அமைச்சர் சுவிலிண்டன், தமிழக அமைச்சர்கள் வேலு, அன்பரசன், பன்னீர்செல்வம் அஷ்லி அல்டிம்ஸ் இந்தியா நிறுவன முதன்மை செயல் அலுவலர் ராஜகோபாலன், நிறுவன தலைவர் விய்கோ குசாகோஷ்கி, தமிழக தொழிற்துறை செயலர் ராஜிவ்ரஞ்சன், சிப்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோவிந்தன், கலெக்டர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments