பாக்., - ஆப்கன் எல்லையில் ஒசாமா பின்லேடன் உள்ளார்


வாஷிங்டன் : " அல் - குவைதாவின் முக்கியத் தலைவர்களான ஒசாமா பின்லேடனும், அய்மன் அல் - ஜவாகிரியும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உயிரோடுதான் இருக்கின்றனர்' என்று, அமெரிக்க செனட் கமிட்டியின் சமீபத்திதைய அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுக்கான செனட் கமிட்டி, தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி, 21 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில், ஆயிரக்கணக்கில் அல் - குவைதாவின் பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன. இப்போது அந்த எல்லையையும் தாண்டி ஏமன், சோமாலியா வரை, தங்கள் கரங்களை நீட்டியுள்ளன. பின்லேடனும் ஜவாகிரியும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புறங்களில்தான் ஒளிந்திருக்கின்றனர். அவர்களுடன் அல் - குவைதாவின் முக்கிய பயங்கரவாதிகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் பாகிஸ்தானில், "பாகிஸ்தானை ஆக்கிரமிக்க நினைக்கும் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுங்கள்' என்ற ரீதியில், மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இயங்கி வரும் அமெரிக்க ஆதரவு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும், மக்களைத் திருப்பி விடுகின்றனர்.
தற்போது மேற்கொண்ட கடும் நடவடிக்கையால், 2001 லிருந்து இதுவரை 500 அல் - குவைதா பயங்கரவாதிகளை கைது செய்து அமெரிக்காவின் விசாரணைக்கு அனுப்பியிருப்பதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கூட்டுப் படைகளின் ஏவுகணைத் தாக்குதலால், பைதுல்லா மெசூத் போன்ற முக்கிய அல் - குவைதா தலைவர்கள் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நடவடிக்கைகளால், பயங்கரவாதிகள் வடமேற்கு எல்லைப் புறங்களிலிருந்து தப்பித்து பாகிஸ்தானின் நகரங்களுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்றும், அப்படிப் புகுந்து விட்டால், அவர்களை அடையாளம் கண்டறிவது மிகக் கடினம்.
ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமாகப் போராடி வருகிறது. இருப்பினும் சில பழங்குடிப் பகுதிகளில் இருந்துகொண்டு பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments